`எங்களை அழிக்க நினைத்த பாஜக-வுடன் ஒருபோதும் சேரமாட்டோம்!’ – உத்தவ் தாக்கரே உறுதி | We will never join BJP who wanted to destroy us: Uddhav Thackeray

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தனியாகவும், முன்னாள் முதல்வரும், பால் தாக்கரே மகனுமான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தனியாகவும் கட்சியின் துவக்க நாளை கொண்டாடின. இதில் கலந்து கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, “எங்களை அழிக்க நினைத்த பா.ஜ.க-வுடன் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டோம். சிவசேனாவின் பெயர், வில் அம்பு சின்னம், எனது தந்தை பால் தாக்கரேயின் படம் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுங்கள். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். மக்களவை தேர்தலில் பால் தாக்கரேயின் உண்மையான வாரிசு யார் என்பதை மக்கள் காட்டியுள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வந்து தேர்தல் பிரசாரம் செய்ய துணிச்சல் இருக்கிறதா? நாங்கள் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் சேருவோம் என்று திட்டமிட்டு வதந்தியை பரப்பிவிடுகின்றனர். எங்கள் முதுகில் குத்தி, எங்களை அழிக்க நினைத்தவர்களுடன் எப்படி கூட்டணி வைப்போம். பா.ஜ.க-வின் இந்துத்துவா கொள்கை பிற்போக்குத்தனமானது. ஆனால் எங்களது இந்துத்துவா கொள்கை முற்போக்கானது. நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்து உண்மையான இந்துத்துவா கொள்கையை பா.ஜ.க தூக்கி எறிந்துள்ளது. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு மற்றும் அரசியலமைப்பை பா.ஜ.க சேதப்படுத்த முயன்றதால்தான் நாங்கள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக மாறினோம்.

நரேந்திர மோடி அமைச்சரவையில் மிகவும் மோசமாக செயல்பட்ட புபேந்திர யாதவ் மற்றும் அஸ்வினி ஆகியோரை மகாராஷ்டிரா தேர்தல் பார்வையாளர்களாக பா.ஜ.க அனுப்பி இருக்கிறது. மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியை மகாராஷ்டிரா மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். சட்டமேலவை தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடவேண்டும்”‘ என்று கேட்டுக்கொண்டார். மக்களவை தேர்தலில் பா.ஜ.க-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த ராஜ் தாக்கரேயையும் உத்தவ் தாக்கரே மறைமுகமாக சாடினார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்த கூட்டத்தில், ஷிண்டே பேசுகையில், “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உத்தரவாதம் இல்லாத சீன குடையை போன்று உத்தரவாதம் இல்லாதது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வாக்கில் சிவசேனா(உத்தவ்) வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை சிறு குழந்தைகூட அறியும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *