சென்னை போரூரில் நடைபெற்று வரும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
ரிப்பன் மாளிகையில் நேற்று சென்னை மாநகராட்சி, நகராட்சி குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். இதில் போரூர் பகுதியில் நடைபெற்று வரும் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணியின் போது மெட்ரோவில் இருந்து சாலையில் தண்ணீர் வெளியேறுவதாகவும் எனவே அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ கணபதி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் புகாருக்கு உள்ளான இடங்களை தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். போரூர் பகுதியில் சென்னை மெட்ரோ நிர்வாகத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரால் பொதுமக்கள் அவதி என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து விருகம்பாக்கம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
இதனிடையே, 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக 6 மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
2-ம் கட்டமாக 116 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டியளித்த மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர், காட்டுப்பாக்கம், முகலிவாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி உள்ளிட்ட 6 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றார்.
மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பிறகு, மேம்பாலப் பணிகள் தொடங்கினால் பொதுமக்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்படும் என்பதால், ஒரே நேரத்தில் இரண்டு பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அர்ஜுனன் தெரிவித்தார்.
.