`எச்சரித்த’ வீரமணி; `மாறுபட்ட’ நாஞ்சில் சம்பத்; மறுசீரமைப்பு – திருமாவளவன் பிறந்தநாள் விழா ஹைலைட்ஸ்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்தநாள் நிகழ்வில், `வி.சி.க நடத்தும் மாநாடு` குறித்தான அறிவிப்பை வெளியிட்டதோடு, கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் திருமாவளவன். அதோடு தி.க தலைவர் கி.வீரமணி, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், நாஞ்சில் சம்பத் ஆகியோரின் உரைகளும் கவனம்பெற்றிருக்கின்றன.

தமிழர் எழுச்சி நாளாக திருமாளவனின் பிறந்தநாளை வி.சி.க-வினர் ஆண்டுதோறும் கொண்டாடிவருகின்றனர். சென்னை காமராஜர் அரங்கத்தில் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை தொடங்கி ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலை வரை நடைபெற்ற நிகழ்வில் கவியரங்கம், வாழ்த்தரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. நாஞ்சில் சம்பத் தலைமையிலான பட்டிமன்றமும், கவிஞர் அப்துல் காதர் தலைமையிலான கவியரங்கமும் கவனம் ஈர்த்தன. நடிகர் ராஜ்கிரண், இசையமைப்பாளர் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில் “திருமாவளவன் மீது சிலருக்குத் தற்போது திடீர் அரசியல் காதல் வந்திருக்கிறது. ஆனால், எங்களுக்கும் திருமாவுக்கும் இடையேயானது கொள்கைப் பாசம். திருமாவுக்குக் கொள்கைப் பாலூட்டியது பெரியார் திடல்” என்றவர், தொடர்ந்து “தி.மு.க கூட்டணியைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. பல கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அரசியல் உள்ளிட்ட அனைத்திலும் திருமாவளவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்

தொடர்ந்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன் “தினமும் ஜெய் ஸ்ரீராம் சொல்வது எனது பழக்கம். ஆனால், கருத்தியல் வேறாக இருந்தாலும் தனிப்பட்ட விதத்தில் நமக்கிடையே எவ்விதப் பகையும் வன்மமும் இல்லை. நமக்கு மதம், சாதி தேவையில்லை, ஆனால் ஆன்மிகம் தேவை; சக மனிதனின் அன்பைவிட வேறு எதுவும் கிடையாது” என்றார்.

நாஞ்சில் சம்பத், “தலித் முதலமைச்சராக முடியாது என்ற திருமாவளவனின் கருத்தில் நான் மாறுபடுகிறேன். அமெரிக்காவில் எப்படி ஆபிரகாம் லிங்கனால் வெள்ளை மாளிகைக்கு வரமுடிந்தது… அதை திருமாவாளவனாலும் சாத்தியப்படுத்த முடியும்” என்றார்.

திருமாவளவனின் ஆவணப்படக் காட்சிப்படுத்துதல், அவரின் உரையாடல் திரையிடலுக்குப் பிறகு இறுதியாக ஏற்புரை வழங்கிய திருமாவளவன், “ஒவ்வோர் ஆண்டும் தமிழர் எழுச்சி நாளன்று, ஒரு கருப்பொருளை ஏற்று, ஆண்டு முழுவதும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். அதன்படி இந்த ஆண்டு `மது மற்றும் போதை ஒழிப்பை’ கருப்பொருளாகக் கொள்வோம். அதற்கு வலுசேர்க்கும்விதமாக ஆக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜயந்தியன்று முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி லட்சணக்கான பெண்கள் பங்கேற்கும் மகளிர் மாநாட்டை நடத்தவிருக்கிறோம்” என அறிவித்தார். தொடர்ந்து, `கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.

மாநாட்டு ஒருங்கிணைப்புக்காகவும் கட்சி நடவடிக்கைகளுக்காகவும் தமிழ்நாடு முழுவதும் மண்டலவாரியாக கூட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.

144 மாவட்டச் செயலாளர்கள் இருக்கும் எண்ணிக்கையை தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என 234 பேரை நியமித்து, அதில் ஓ.பி.சி சமூகங்களுக்கும், பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கவிருப்பதாகத் தகவல் தெரிவிக்கிறார்கள் வி.சி.க-வினர்.

இந்த நிகழ்ச்சியில் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், பனையூர் பாபு, ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, ஆதவ் ஆர்ஜூன், எழில் கரோலின் உள்ளிட்ட கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *