“எதற்காக முதல்வர் பதவி விலக வேண்டும்? அன்று ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா..?” – ஆர்.எஸ்.பாரதி | rs bharathi press meet in puthukottai regarding kallakkurichi issue

புதுக்கோட்டையில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சி.பி.ஐ விசாரணை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை. அவர் முதலமைச்சராக இருந்தபோது செய்த ஊழலுக்காக வழக்கு தொடரப்பட்டபோது நீதிமன்றம் அந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால், ஒரே ஓட்டமாக ஓடோடி உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி. சி.பி.ஐ-யை விசாரிக்க சொல்வது இந்த வழக்கை தாமதப்படுத்தி வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை மறைப்பதற்கு முயற்சி செய்வது என்பதுதான் எனது கருத்து. சி.பி.ஐ வழக்கை உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், கடந்த 2016-ல் 570 கோடி ரூபாய் கன்டெய்னர் வழக்கில் இன்று வரை சி.பி.ஐ விசாரணையில் அந்த பணம் யாருக்கு சொந்தம் என்று கூறவில்லை. அந்த வழக்கை முடிக்கவில்லை.

அண்ணாமலை போன்றவர்கள் சி.பி.ஐ விசாரணை கேட்பதற்கான நோக்கம் தெரிகிறது… அவர்களது ஆட்கள் யாராவது சம்பந்தப்பட்டிருப்பார்கள். அவர்களை காப்பாற்றுவதற்காக சி.பி.ஐ விசாரணையை கேட்கின்றனர். ஒன்றிய அரசு நினைத்தால் ஒருவர் மீது இ.டி, சி.பி.ஐ சோதனை… அதேநேரம் அவர்கள் பா.ஜ.க-வில் இணைந்தால் சோதனை நிறுத்தம் என செயல்பட்டு வருகிறது. சி.பி.சி.ஐ.டி விசாரணை நேர்மையாக நடைபெற்று வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி-யும், விசாரணை ஆணையமும் விசாரிக்கிற போது நிச்சயம் நியாயமாக இருக்கும். யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

முதலமைச்சரும் சட்டமன்றத்தில், “எதிர்க்கட்சிகளே வாருங்கள்… பதில் கூறுகிறேன்’ என்று அழைத்தார். ஆனால், யாரும் வரவில்லை. நடக்கக் கூடாத அசம்பாவிதம் நடந்து விட்டது. இதற்கு பிறகு சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெற்ற வருகிறது. விசாரணை முடிவில் நிச்சயம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது தெரியவரும். இந்நிலையில், எதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பதவி விலக வேண்டும்?. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கும்பகோணத்தில் மகா மகாமகத்தில் 100 பேர் உயிரிழந்தனர். அப்போது, ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்தாரா?. அ.தி.மு.க ஆட்சியில் சாராயம் குடித்து பலர் உயிரிழப்பின்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?. சும்மா அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம்.

ஆர்.எஸ்.பாரதி ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

மெத்தனால் வந்தது பாண்டிச்சேரியில் இருந்துதான். அதனால், பாண்டிச்சேரி முதலமைச்சர் ராஜினாமா செய்வாரா?. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா?. அரசியலுக்காக இரண்டு நாள்கள் அவர்கள் இதைப்பற்றி பேசுவார்கள். தற்போது, மக்களே புரிந்து கொண்டார்கள். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் கேள்வி எழுப்பலாம். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் இந்த சம்பவம் நடக்க காரணமாக இருந்தவர்களை கூண்டோடு பணியிடை நீக்கம் செய்துள்ளார். அந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் படிப்படியாக அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கு முன்பு இதுபோல் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் பார்த்துக் கொண்டுள்ளது. நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கொடுத்த உத்தரவுபடி தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்கும். கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் காவல் அதிகாரிகளை அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டம் நடத்தினார். அதற்கு பிறகும் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால், வேதனைக்குரிய ஒன்றுதான்.

விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி ஒரு சம்பவம் நடைபெறுகிறது என்றால் இதில் அரசியல் பின்புலம் இருக்கிறதா…யாரேனும் திட்டமிட்டு இந்த செயலை செய்தார்களா… இது சரியா என்பது விசாரணையில் தான் தெரிய வரும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளச்சாராயம் விவகாரம் ஒருபோதும் எடுபடாது. காரணம், எங்கள் பிரசாரத்தில் இதுகுறித்து மக்களிடம் விளக்கி கூறி நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *