இந்தியாவில் நடந்து முடிந்துள்ள 18வது நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றிபெற்றாக வேண்டும் என்கிற சூழலில் பாஜக பெரும்பான்மைக்கு குறைவாக 240 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்களின் ஆதரவில் ஆட்சியை அமைத்துள்ளது.
3வது முறையாக மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுள்ளார், மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் தான் நம் நாட்டில் முதலில் தீர்க்க வேண்டிய பிரச்னை பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
“தேர்தல் கொண்டாட்டம் முடிந்து விட்டது. இனி மணிப்பூருக்கு முன்னுரிமை தாருங்கள்” – மோகன் பகவத்
நாக்பூரில் நடந்த அமைப்பு ரீதியிலான ‘Karyakarta Vikas Varg- Dwitiya’ நிகழ்ச்சியில் மோகன் பகவத் பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‛‛மணிப்பூர் மாநிலம் கடந்த ஓராண்டாக அமைதிக்கு ஏங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மணிப்பூரில் அமைதி நிலவி வந்தது. ஆனால் துப்பாக்கி கலாசாரம் என்பது அதிகரித்து அமைதியை சீர்குலைத்துள்ளது, அதோடு வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது. இதனால் மணிப்பூரில் அமைதியை கொண்டு வர முன்னுரிமை கொடுக்க வேண்டும், மேலும் தேர்தல் தொடர்பான பேச்சுகளை விட்டுவிட்டு நம் நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு அமைதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மத்திய அரசும் மணிப்பூரை ஆட்சி செய்யும் பாஜக அரசும் சேர்ந்து வன்முறைக்கு தீர்வு காண வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் பாஜக இடையே மோதல் நிலவுவதாக விவாதம் எழுந்தது.
இந்நிகழ்வை குறிப்பிட்டு மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை மூத்த எம்.பியுமான கபில் சிபல் பேசுகையில், “பல மாதங்களாக இதை(மணிப்பூர் விவகாரம்) நான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். நான் ராஜ்யசபாவில் இருந்தபோது, 1998-2004 காலகட்டத்தில், வாஜ்பாய் அரசு ஆட்சியில் இருந்தது. அவரது பேச்சை நான் பலமுறை கேட்டிருக்கிறேன், எதிர்க்கட்சிகளை ‘பிரதிபக்ஷ்’ என்று அழைப்பார், நீங்கள் எங்கள் விரோதி இல்லை என்று அவர் அடிக்கடி சொல்வார், ஆனால் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ‘விரோதிகளை’ போல நினைத்துக் கொண்டுள்ளார். மணிப்பூரைப் பற்றி நாங்கள் கவலை தெரிவித்தோம், அதேபோல ஆர்எஸ்எஸ் தலைவரும் இதுகுறித்து பேசியிருப்பது உற்றுநோக்கதக்கது.
மணிப்பூருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அங்குள்ள முதல்வர் பைரன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தேன். ஆனால் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரையே நீக்க முடியாத நீங்கள், முதல்வரை என்ன செய்வீர்கள்? காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கினீர்கள், ஆனால் இப்போது வரை காஷ்மீரில் எதுவும் மாறவில்லை. இப்போது பஸ் மீது கொடிய தாக்குதல் நடந்துள்ளது. இப்போதுகூட அங்கு உமர் அப்துல்லாவை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது யார்? எனவே கடந்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்களோ அதை மீண்டும் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தேஜ கூட்டணி அரசில் செய்து விடாதீர்கள். பாஜவுக்கு ஆட்சி நடத்தும் எண்ணமில்லை, அதிகார ஆசை மட்டுமே உள்ளது” எனக்கூறினார்.
மேலும் தொடர்ந்தவர், “ஜவஹர்லால் நேருவையும், பிரதமர் மோடியையும் ஒப்பிடக் கூடாது, நீங்கள் (மோடி) மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று இருக்கலாம், ஆனால் நேருவிடம் இருந்த அந்த எண்ணத்தெளிவு, மக்களாட்சி மீது அவர் கொண்டிருந்த பற்று, நல்ல சிந்தனைகள் உங்களிடம் (மோடி) அறவே கிடையாது.
நான் பிரதமர் மோடியை மணிப்பூர் போகச் சொன்னபோதும், எதிர்க்கட்சியின் பேச்சைக் கேட்கச் சொன்னபோதும், அகங்காரத்துடன் இருக்கக்கூடாது எனக் கூறியபோதும், அவர் உபயோகிக்கும் வார்த்தைகள் சரியில்லை என சொன்னபோதும் பாஜகவினர் என்னை விமர்சித்தீர்களே..! இப்போது RSS-ன் மோகன் பகவத்தும் அதைதான் சொல்லியிருக்கிறார் அவரை உங்களால் விமர்சிக்க இயலுமா?” என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, X தளத்தில் சிபல் வெளியிட்ட பதிவு ஒன்றில், “காஷ்மீரில் அதிகரித்து வரும் தீவிரவாதம், மணிப்பூரில் சமூக அமைதியின்மை, வேலையின்மை, பணவீக்கம் குறித்து உங்களுக்கு எள்ளளவும் கவலையில்லை, எதிர்கட்சிகள் பேச்சை கேட்கும் எண்ணம் துளியும் உங்களுக்கு இல்லை, அது உங்கள் டிஎன்ஏவிலும் (DNA) இல்லை குறைந்தபட்சம் மோகன் பகவத்தின் பேச்சையாவது கேளுங்கள்… பிறகு விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று கேமராக்கள், புகைப்பட கருவிகள் இன்றி ‘தியானம்’ செய்யுங்கள்” என சாடியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88