`எமர்ஜென்சி’-யை விடாது கையிலெடுக்கும் பாஜக – பின்னணி என்ன?!

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், `பா.ஜ.க நாட்டின் அரசியலமைப்பை மாற்ற முயல்கிறது’ எனக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனத்தை பா.ஜ.க கையில் எடுத்திருக்கிறது. அதாவது எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட ஜூலை 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாக பிரதமர் மோடி, “இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ நினைவுபடுத்தும். காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட நெருக்கடி நிலை காரணமாக ஏற்பட்ட இந்திய வரலாற்றின் இருண்ட கட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக இது இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

Emergency – மோடி – இந்திரா காந்தி

இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக அவசரநிலையைப் பிரகடனம் செய்தார். இதன் மூலமாக, ஜனநாயகத்தின் ஆன்மாவை அவர் நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் ஒடுக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்புப் படுகொலை தினமாகக் கடைப்பிடிப்பதென்று மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. ‘அரசியலமைப்புப் படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வோர் இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க உதவும். காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள் அந்தக் கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது. அறிவிக்கப்படாத 10 ஆண்டுகள் அவசரநிலையைப் பிறப்பித்தவர் அவர். அதன் காரணமாகவே, இந்த தேர்தலில் மக்கள் அவருக்குத் தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மிக தோல்வியை வழங்கினர். இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்திய பிரதமர் இவர். இந்திய அரசியல் சாசனம் மனுஸ்மிருதியிலிருந்து உத்வேகம் பெறவில்லை என்பதால் அதனை நிராகரிக்கிறோம் எனக் கூறியவர்களின் கருத்தியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமருக்கு, டெமாக்ரசி என்பது டெமோ-குர்சி மட்டுமே” எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி

இந்த விவகாரம் அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான் மீண்டும் எமர்ஜென்சியை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, ஜக்தீப் தன்கர், ‘எமர்ஜென்சி காலத்தில் நடந்த அட்டூழியங்கள் குறித்து விசாரித்த ஷா கமிஷனின் அறிக்கையைச் சபையில் சமர்ப்பிக்கலாம்’ எனத் தெரிவித்திருந்தார். அதாவது 1975-ம் ஆண்டில் எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட போது, மத்திய அரசை விமர்சனம் செய்த அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பத்திரிக்கைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது.

பிறகு 1977-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தலைமையிலான ஜனதா கட்சி எமர்ஜென்சியின் போது நடந்த விஷயங்களை ஆராய்வதற்கு என முன்னாள் தலைமை நீதிபதி ஜெ.சி.ஷா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு ஆய்வு செய்து 1978-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அதற்குள் அந்த கட்சிக்குள் உட்கட்சி பிரச்னை வெடித்தது. இதனால் மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்தது. பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை 1980-ம் ஆண்டு இந்திரா கைப்பற்றினார். அவர் ஷா கமிஷன் அறிக்கையைக் குப்பையில் தூக்கி வீசியதுடன் கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார். இந்த சூழலில்தான் சம்பந்தப்பட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பா.ஜ.க அரசு தயாராகி வருகிறது.

மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியேற்பு

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “ராகுல் காந்தி ஒருமுறை கையில் அரசியலமைப்பு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ‘பா.ஜ.க ஆட்சியில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தை நீங்கள் மதிப்பதில்லை. அரசியலமைப்பை சட்டப்படி இயங்கும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள்’ எனக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில்தான் பா.ஜ.க-வினர் எமர்ஜென்சியை கையில் எடுத்திருக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தைக் குழி தோண்டி புதைத்தார்கள், வரலாற்றில் கருப்பு தினம் என்பதெல்லாம் ஒதுக்கக்கூடிய விஷயம்தான். ஆனால் அதன்பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி வெற்றிபெற்றார். உத்தரப்பிரதேசத்தில் மக்கள் அவரை தேர்ந்தெடுத்தார்கள். பா.ஜ.க-வினரை தோற்கடித்தார்கள்.

ப்ரியன்

50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை ஏன் இப்போது எதற்காகப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் கலந்து கொள்ளவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகும் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தேசியக் கொடியைப் பல ஆண்டுகளாக ஏற்றாமல் இருந்தனர். நானாஜி தேஷ்முக் என்கிற ஆர்எஸ்எஸ் தலைவர், ‘சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஒரு இயக்கமாகக் கலந்துகொள்ளவில்லை’ எனச் சொல்லியிருக்கிறார். இதன்படி பார்த்தல் ஆகஸ்ட் 15-ம் தேதி கொடி ஏற்றுவதற்கே உரிமை இல்லை என மோடியைச் சொல்ல முடியுமா.. உங்களது இயக்க முன்னோர்கள் ரத்தம் சிந்தவில்லை எனச் சொல்ல முடியுமா.. பதவியில் இருப்பதால் சொல்ல முடியாது. ஆகவே இந்திரா காந்தி பதவியில் இருக்கும் போது ஏதாவது செய்திருப்பார். அவர் அதற்கு வருத்தம் தெரிவித்தார். மக்களும் அதனை ஏற்று அவரை மீண்டும் தேர்வு செய்திருக்கிறார்கள். இதனை அப்படி தான் பார்க்க வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *