`எம்.ஜி.ஆரின் காலைப்பிடித்து முதல்வரானவர் கருணாநிதி…' – மதுரையில் ஆவேசமான திண்டுக்கல் சீனிவாசன்!

கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கக் கூடாது என்று அதிமுக சார்பில் மதுரை அருகே செக்காணூரணியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில்

முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் தலைமை வகித்து பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “எடப்பாடி பழனிசாமி தொட்டதெல்லாம் துலங்கும், அவர் கை பட்டதெல்லாம் விளங்கும் என்பதற்கு இந்த போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு. உண்ணாவிரத போராட்டம் அறிவித்தவுடன் அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து அறிக்கை வந்துகொண்டிருக்கிறது.

1973 ஆம் ஆண்டு மாயத்தேவரை எம்.ஜி.ஆர் நிறுத்தி ஒரு லட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார், அதற்கு உறுதுணையாக இருந்த இந்த சமுதாய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் அறிக்கை விட்டார் . அப்போதிருந்து கருணாநிதி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இச்சமுதாய மக்களை வஞ்சித்து வருகிறார். அதை அவர் மகன் மு.க.ஸ்டாலினிடமும்  சொல்லியிருப்பார்போல, இவரும் வஞ்சிக்கிறார்.

பிரமலைகள்ளர் சமுதாய மக்களுக்கு நன்மை செய்யாத ஒரே கட்சி தி.மு.க-தான். அரசாணை எண் 40-ஐ வெளியிட்டு பழிவாங்க துடிக்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 520 வாக்குறுதிகள் கொடுத்தீர்கள். அதில் எதை நிறைவேற்றினீர்கள்? மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகைகூட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய பின்புதான் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த முதலமைச்சர் அவர்தான் என தெரிந்துவிட்டது.

திண்டுக்கல் சீனிவாசன்

நாம் தோளில் சுமந்தவர்கள் நம் காதை கடித்த வரலாறு உள்ளது, அவர்களுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை நாம் உருவாக்கி கொடுத்தோம். நாடாளுமன்றத் தேர்தல் பற்றி கவலைப்பட வேண்டாம். 2026-ல் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக வருவார். நான்கரை ஆண்டுக்காலம் சிறப்பான ஆட்சியை கொடுத்தார், இன்று ஒற்றைத் தலைமையாக உள்ளார்.

கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் சேர்க்கும் திட்டமே இல்லை என்று வார்த்தையில் கூறுகிறார்கள். இது என்ன வேத வாக்கா? செல்லும் வார்த்தைக்கு உத்தரவாதம் உண்டா?

அன்று நாவலர் நெடுஞ்செழியன் முதல்வராக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் காலைப்பிடித்து முதல்வர் ஆனவர் கருணாநிதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனவர் அல்ல, அதை இன்றைய முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும், அதன் பின்பு எம்.ஜி.ஆர் இருக்கும் வரை கருணாநிதியால் முதல்வராக வர முடியவில்லை. இன்றும் நமது துரோகிகள் கட்சியை அழிக்க, ஒழிக்க நினைக்கிறார்கள் எது எடுபடாது, எம்.ஜி.ஆரின் ஆன்மா, ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடியாரை ஆசிர்வதித்து கொண்டிருக்கிறது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

இந்திய பிரதமராக மோடி வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். ஆனால், அவர்களோ அடுத்த முதலமைச்சர் நாங்கள்தான் என்று சொன்னார்கள், நாம் என்ன இளிச்சவாயர்களா? அதனால்தான் ஜெயலலிதா போல எடப்பாடியாரும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று கூறினார்.

கருணாநிதி நாணயத்தை ராஜ்நாத் சிங் மூலம் ஸ்டாலின் வெளியிட்டார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரை கூப்பிடவில்லை. அதற்கு முன்பு பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். இதை சுட்டிக்காட்டித்தான் நாணய வெளியீட்டு விழாவில் பா.ஜ.க-வுடன் தி.மு.க-வுக்கு உறவு ஏற்பட்டுள்ளது என்று எடப்பாடியார் கூறினார், அதற்கு இன்னும் பதில் வரவில்லை. நாணய வெளியீட்டு விழா மத்திய அரசு விழா என்று ஸ்டாலின் கூறினார், ஆனால் மத்திய அமைச்சர் முருகன் இது மாநில அரசு விழா என்று கூறிவிட்டார். நாங்களும் எம்.ஜி.ஆருக்கு நாணய வெளியீட்டு விழா நடத்தினோம். அந்த நாணயத்தை அ.தி.மு.க-வே நடத்தியது, நாணயத்தின் வெளியீட்டு விழா மூலம் பா.ஜ.க திமுக கூட்டணி மலர்ந்துள்ளது.

கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கி வந்த கள்ளர் பள்ளிகள், விடுதிகளை பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிடம் மாற்ற அரசு முயற்சிக்கிறது. இதற்கான அரசாணை எண் 40- ஐ வெளியிட்டுள்ளனர். இந்த அரசாணையை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *