திருச்சியில் ரவுடி துரைசாமி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், காவல்துறை எஸ்.பி.களுக்கு கொலை மிரட்டல் விடுத்து நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். ரீல்ஸ் வெளியிட்டு பீதியை கிளப்பியவர் சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி கடந்த 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தைல மரகாட்டில் பதுங்கி இருந்த போது போலீசாரால் சுட்டக் கொல்லப்பட்டார். அவரை பிடிக்க முயன்ற போது போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக போலீசார் சுட்டத்தில் அவர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார்.
இந்நிலையில், இறந்துபோன ரவுடி துரைசாமியின் ஆதரவாளர்கள் சிலர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் தளத்தில், “mgr-nagar- official” என்ற அக்கவுண்ட்டிலிருந்து திடுக்கிடும் ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்திருந்தனர். அதில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரின் புகைப்படத்தை பகிர்ந்து “திருச்சியில் சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும்” என்று பகிரங்கமாக கொலைமிரட்டல் விடுத்திருந்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ரீல்ஸ் வீடியோ குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் இந்த ரீல்ஸை வெளியிட்டது, திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை, எம்ஜிஆர் நகரை சேர்ந்த 21 வயதான ராஜபாண்டி என்பது தெரிய வந்தது அவரை பிடிப்பதற்கு சென்றபோது, போலீசாரை நோக்கி பட்டாகத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
ராஜபாண்டியை சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோன்று, பொதுமக்கள் மத்தியில் கலவரம் ஏற்படும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுபோன்ற நபர்கள் குறித்த தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
.