இந்தச் சூழலில், வி.கே. பாண்டியன் பற்றி நிறையவே பேசியாக வேண்டும். ஆம், இந்த முறை நவீன் ஆட்சியைப் பறிகொடுத்த பின்னணியில், பாண்டியன் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார் எனும்போது அதைப் பேசாமல் இருக்கமுடியாதுதானே?
முதல்வராக இருந்த நவீனுக்கு வலது கரமாக விளங்கிய வி.கார்த்திகேய பாண்டியன் என்கிற வி. கே. பாண்டியன், ஒடிஷா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதன் பின்னணியில் இருப்பது… அநாகரிகமான தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட பா.ஜ.க-தான்.


முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், கடந்து ஏழு மாதங்களாகத்தான் அரசியல்வாதி. ”ஆறாவது தடவையாக நவீன் பாபு (நவீன் பட்நாயக்கை இப்படித்தான் அழைக்கிறார்) முதல்வராக ஆவார். அது நடக்காவிட்டால், அரசியலில் இருந்தே விலகுவேன்” என்று அறிவித்திருந்தார், பாண்டியன். ஆனால், இந்த பாண்டியனின் தமிழ் அடையாளமே பா.ஜ.க-வின் தேர்தல் துருப்புச்சீட்டாக மாறியது.
ஒடிஷா சென்ற நரேந்திர மோடி, வி.கே.பாண்டியன் தமிழர் என்பதை மனதில் கொண்டு, ’பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் நகைகள் இருக்கும் நிலவறையின் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்று விட்டது’ என்று கிண்டலாகப் பேசினார்.
’தமிழர்களை திருடர்கள் என்று சொல்வீர்களா?’ எனக் கேட்டு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சமூக வலைதளங்களில் தமிழர்கள் கொந்தளித்தனர். பாண்டியனுக்கு எதிரான பா.ஜ.க-வின் பரப்புரை, ஒடிஷா மக்களிடையே இனவாதத்தைத் தூண்டிவிடவே, எதிர்பார்த்தது போலவே பா.ஜ.கவுக்கு அது சாதகமாக மாறியது.