துருவ் ராட்டி – இந்தப் பெயர் இந்தியர்களின் மனங்களில் நிலைக்கப் போகிறதென, ஓராண்டுக்கு முன்னால் யாரேனும் நினைத்திருக்க முடியாது. ஆனால், யூடியூபரான இவரை பற்றி இன்று சர்வதேச ஊடகங்கள் கட்டுரைகள் வெளியிடுகின்றன. சமூக வலைதளங்களில் இவரை கொண்டாடுகிறார்கள். இந்தியத் தேர்தலில் இவர் ஆற்றிய பங்கு குறித்து சாமான்ய மக்களும் பேசுகிறார்கள். குறிப்பாக, தேர்தல் சமயத்தில், மோடி அரசு மீதான விமர்சனங்கள், மற்றும் சமூகப் பிரச்னைகள் பற்றிய இவரது யூடியூப் வீடியோக்கள் பற்றி எரிந்து பகிரப்பட்டன. தேர்தலில் பி.ஜே.பிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு துருவ் ராட்டியும் ஒரு முக்கியக் காரணம் என்று பரவலாகப் பேசப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, ‘ஒரு சாதாரண மனிதனின் சக்தியை எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் துருவ்!
தொடக்கத்தில், தான் செல்லும் இடங்கள் குறித்த காணொளிகளை, ’இணையம் மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்வது எப்படி?’ என்பது போன்ற காணொளிகளை வெளியிட்டு வந்தவர் துருவ் ராட்டி.
“உங்கள் பள்ளி உங்களுக்குக் கற்பிக்காததை கற்றுக்கொள்ளுங்கள்’ – இதுவே துருவ் ராட்டியின் டேக் லைன். இன்றோ, அவரது அடையாளம் தேசத்தின் அரசியலில் ஓர் அங்கமாகியுள்ளது. நடந்து முடிந்திருக்கும் மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற முடியாததற்குக் காரணமாக விளங்கியவர்களில் மிக முக்கியமானவர் என அடையாளம் காணப்படுகிறார், 29 வயது இளைஞர் துருவ் ராட்டி.
பிரமிப்பூட்டுகிறது துருவ் ராட்டியின் வளர்ச்சி. அவருடைய யூடியூப் தளத்தில் இருக்கும் அவருடைய பழைய காணொளிகள் முதல் இப்போது உள்ளவை வரை பார்த்துவந்தால்… இந்த இளைஞரின் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. பயணம், சாகசப் பயணங்கள், அறிவியல், வரலாறு, விண்வெளி, சமூகப் பண்பாட்டுப் பிரச்னைகள், கம்யூனிசம், முதலாளித்துவம், கொரோனா வைரஸ், பொருளாதாரம், கல்வி, உலகம், இந்திய அரசியல் உட்பட பல்வேறு தலைப்புகளில் காணொளிகள் காணக் கிடைக்கின்றன. 20+ வயதுகளுக்கே உரித்தான பயணக் குதூகலம், புது இடங்களைச் சுற்றிப் பார்த்து அது பற்றி உலகிற்கு எடுத்துக் கூறுவது என்பது போன்ற காணொளிகளோடு தொடங்கிய ஓர் இளைஞர், இப்போது முதிர்ச்சியுடன், தெளிவுடன், தரவுகளுடன், விழிப்புணர்வூட்டும் அரசியல் பேசும் நபராக உருவாகி இருப்பது காலத்தின் கட்டாயம் என்று கூற வேண்டும்.