தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களில் தலா ஆயிரம் காவலர்கள் வீதம் 39 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவற்றை தவிர, கட்சி அலுவலகங்கள், பொது இடங்களில் 60,000 காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதையும் படிக்க:
நியூஸ்18 குழுமத்தின் மெகா கருத்து கணிப்பு முடிவுகள் – மாநிலம் வாரியாக யாருக்கு எவ்வளவு தொகுதிகள்? – முழு விவரம்
இதனிடையே, சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையை பார்வையிட பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக காத்திகே தன்ஜி புத்தப்பாட்டி நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர் தொகுதிகளுக்கு ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதே போன்று, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகளுக்கும் பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே வடசென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மையத்தில் செய்யப்பட்டுள்ள பல்வேறு வசதிகள், வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அவர் பார்வையிட்டார்.
வடசென்னை மற்றும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 டேபிள்களும், தென் சென்னையில் சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 30 டேபிள்கள் போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்காக மொத்தம் 268 டேபிள்கள் போடப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்து 384 பணியாளர்கள் தொடர்ந்து மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
.