வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டுக்கு அருகேயுள்ள செண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் மட்டும் வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இது பற்றி தகவலறிந்ததும், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருவோரை பார்வையிட்டு, அவர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து, உபாதைகளுக்கான காரணத்தை கண்டறியவும் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமிக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பாலசந்திரன் உள்ளிட்டோர் செண்டத்தூர் கிராமத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். உபாதைகள் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்களும் அங்கு உலாவிக்கொண்டிருக்கின்றன. முதியவர் ஒருவரும் உயிரிழந்திருப்பதால், செண்டத்தூர் கிராமமே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் கேட்டபோது, “செண்டத்தூர் கிராமத்தில் 2 நாள்களுக்கு முன்பு நடந்த திருவிழாவில் கறி விருந்து பரிமாறப்பட்டிருக்கிறது. அதைச் சாப்பிட்டதால் உபாதைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு தகவலும், குடிநீரால் பாதிப்பு உண்டாகியிருக்கலாம் என்று இன்னொரு தகவலும் வந்திருக்கிறது. உபாதைகள் ஏற்பட்டவுடன் உடனடியாக மேல்பட்டி சுகாதார நிலையத்துக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டனர். பிறகு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அனைவரும் நலமுடன் இருக்கின்றனர்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட முதியவர் மீதும் சிறப்பு கவனம் எடுத்துகொள்வதற்காக மருத்துவமனை டீனிடம் நானே தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறேன்.
80 வயதாகும் பலராமன் என்ற முதியவர் மட்டும் உயிரிழந்திருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே மாரடைப்பு போன்ற பாதிப்புகள் இருந்திருக்கின்றன. இருந்தாலும், சூழ்நிலையை கருத்தில்கொண்டு வீடு, வீடாக சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு உத்தரவிட்டிருக்கிறேன். 7 மருத்துவர்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவினரும் ஓ.ஆர்.எஸ் கரைசலை கொடுத்து பரிசோதித்துக்கொண்டிருக்கின்றனர். குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு சுத்தப்படுத்திய பிறகு தண்ணீரை நிரப்பி விநியோகிக்கவும் அறிவுறுத்தியிருக்கிறேன். தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியரும் அங்கு விசாரணை நடத்தி வருகிறார். விசாரணைக்குப் பிறகே வயிற்றுப் போக்கு ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும்’’ என்றார் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88