ஆண்டொன்றைக் கடந்த பிறகும் முழுவதுமாய் அணையாமல் விட்டுவிட்டு கனன்றுகொண்டிருக்கிறது மணிப்பூர் கலவரம். இந்த நிலையில், முதல்வர் பிரேன் சிங் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டிருப்பதும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பா.ஜ.க அரசுக்கு எதிராகப் பேசியிருப்பதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க ஆட்சி செய்துவரும் மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இரு சமூகத்துக்கு இடையே மோதல் வெடித்தது. மணிப்பூர் மாநிலத்தின் அரசியலிலும் மக்கள் தொகையிலும் பெரும்பான்மை வகிக்கும் `மெய்தி’ சமூகத்தினரைப் பழங்குடிப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறுபான்மை `குக்கி’ பழங்குடியினர் அமைதிப் பேரணி நடத்தினர். குக்கி மக்களின் பேரணியின் மீது மெய்தி சமூகத்தினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு சமூகத்துக்கும் இடையேயான மோதல் மாநிலம் முழுவதும் பரவியது.
குறிப்பாக, குக்கி பழங்குடிகளின் கிறிஸ்தவ தேவாலயங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மெய்திசமூகத்தினரால், மூன்று குக்கி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு சாலைகளில் இழுத்துவரப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு எதிராக நாடே கொந்தளித்தது. வன்முறையைக் கட்டுப்படுத்தி, அமைதியை ஏற்படுத்தவேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசையும் மணிப்பூர் மாநில அரசையும் வலியுறுத்தினர். ஆனால், மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் பெரும்பான்மை மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரசு ஆதரவுடன் குக்கிகளுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டு வருவதாகப் பல்வேறு தரப்பினரால் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காததும், பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு செல்லாததும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
ஓயாமல் நடந்துவரும் மணிப்பூர் கலவரத்தால் இதுவரையில் 221 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். தங்களின் சமூக மக்களை காப்பதற்காக பள்ளி கல்லூரி மாணவர்கள்,இளைஞர்கள் புத்தகங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆயுதங்களை கையிலெடுத்திருக்கின்றனர். ஆகவே இன்றுவரையிலும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. இந்த நிலையில்தான், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ.கவை தோற்கடித்த மக்கள், காங்கிரஸை வெற்றிபெற வைத்திருக்கின்றனர்.
இந்தநிலையில், மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டம் வழியாக சென்றுகொண்டிருந்த முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்பு வாகனத்தின்மீது போராட்டக்காரர்களின் ஒரு தரப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். இதில், முதல்வரின் பாதுக்காப்பு கான்வாய் அதிகாரி ஒருவர் தோள்பட்டையில் குண்டடிபட்டு காயமடைந்தார். உடனடியாக இம்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தின்மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், “பாதுகாப்பு படையினர்மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தாக்கியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். முதல்வர்மீது தாக்குதல் நடத்துவது நேரடியாக மக்களின்மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு சமம்!” என சீறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “மணிப்பூர் ஓராண்டாக அமைதிக்காகக் காத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகள் மாநிலம் அமைதியாக இருந்தபோது, பழைய துப்பாக்கி கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால், திடீரென கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையால் மணிப்பூர் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. மணிப்பூர் மக்கள் உதவிக்காக அழுதுகொண்டிருக்கிறார்கள். இதை யார் இதைக் கவனிப்பது?” எனக் கேள்வி எழுப்பியவர், “பொருளாதாரம், பாதுகாப்பு, விளையாட்டு, கலாச்சாரம், தொழில்நுட்பம் என பல துறைகளில் நாம் முன்னேறி இருக்கிறோம். அதனால், எல்லா சவால்களையும் நாம் தாண்டிவிட்டோம் என்று அர்த்தமல்ல. முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பிரச்னையை பரிசீலனை செய்வது நம் கடமை. எனவே, தேர்தல் கொண்டாட்டங்களிலிருந்து விடுபட்டு, நாடு எதிர்நோக்கியிருக்கு பிரச்னைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்!” என பா.ஜ.க அரசுக்கு சூசமாக அறிவுறுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய், “ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் வார்த்தைகளை பிரதமர் மோடி கவனத்தில் எடுத்துக்கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மோடி மணிப்பூரை தவிர்ப்பார்; விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வளைக்கவே முயற்சிப்பார்!” என காட்டமாக பதிலளித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88