நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தை புள்ளிகள் திடீரென உயரத் தொடங்கியது.
குறிப்பாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 2,622 புள்ளிகள் (3.5 சதவீதம்) அளவுக்கு உயர்ந்து, இதுவரை இல்லாத அளவில் 76,583 புள்ளிகளாக காணப்பட்டது. இதே போன்று, தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி குறியீடு 807 புள்ளிகள் வரை உயர்ந்து, 23,337 புள்ளிகளாக காணப்பட்டது. சென்செக்ஸ் குறியீட்டில், பவர் கிரிட், எல் அண்டு டி, என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி, எம் அண்டு எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியன லாபத்துடன் காணப்பட்டன.
இந்த நிறுவனங்களின் பங்குகள் 3 சதவீதம் முதல் 7 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருந்தன. நிஃப்டி குறியீட்டில், பொதுத்துறை வங்கி குறியீடு 5 சதவீதம் அளவுக்கும், ரியல் எஸ்டேட் துறை 4 சதவீதம் அளவுக்கும், வங்கி துறை 3 சதவீதம் அளவுக்கும் உயர்ந்து, அது சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன. ஆனால், தேர்தல் முடிவுகளுக்கும் கருத்துக்கணிப்பின் முடிவுகளுக்கு சம்பந்தமில்லாமல் இருந்தது. அதனால், பங்குச்சந்தைப் புள்ளிகள் இறங்கத் தொடங்கியது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே, செபி தலைவர் மதாபி பூரி புச்சிற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “ஜூன் 3-ம் தேதி தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியானது. அதில், பல கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க அமோக வெற்றி பெறும் என்று கூறியது. கருத்துக்கணிப்புகளைத் தொடர்ந்து ஜூன் 3 அன்று பங்குச்சந்தை பெருமளவில் உயர்ந்தது. இருப்பினும், அடுத்த நாள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தை வீழ்ச்சியடைந்தது.
ஏனெனில் கருத்துக்கணிப்புகளுக்கும் உண்மையான விளைவுகளுக்கும் இடையே அதிகமான முரண்பாடு இருந்தது. இதனால், ஜூன் 4-ம் தேதி முதலீட்டாளர்களுக்கு ரூ.31 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளே ஒரு மோசடி எனக் கருதுகிறோம். கருத்துக்கணிப்புகளின் பின்னணியில் பங்குச்சந்தை ஏற்றம் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட சரிவு குறித்து செபி விசாரிக்க வேண்டும். இதன் பின்னணியில் பா.ஜ.க அல்லது வேறு ஏதேனும் நிறுவனம் இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb