வேலூர், காட்பாடிக்கு அருகேயுள்ள கிறிஸ்டியான்பேட்டை அரசு நிதியுதவிப் பெறும் பள்ளியில், `முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ தொடங்கி வைத்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி ஒழுங்காற்றுக்குழு வேண்டுகோளாக அல்லது உத்தரவாகக் கர்நாடக அரசிடம் ஒன்றைத் தெரிவித்தது. `தமிழகத்துக்குத் தரவேண்டிய நீர் நிறைய இருந்தாலும், அவர்களின் அடிப்படை தேவைகளைப் போக்குவதற்காக நாளொன்றுக்கு 1 டி.எம்.சி-யை தரவேண்டும்’ என்று சொன்னார்கள். `தர முடியாது’ என்று அவர்கள் அடம்பிடித்தார்கள். ஆனாலும், நாங்கள் நிலைமைகளை விளக்கிச்சொல்லி, `கர்நாடக அரசு கனிவோடு கவனிக்க வேண்டும்’ என்றோம்.
அதன் பிறகும் கர்நாடக அரசு தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாமல், `8,000 கன அடி நீர் மட்டுமே தருகிறோம்’ என்று சொல்கிறார்கள். `கபினி’யில் இன்று பெருமளவு பெருக்கெடுத்து வந்துகொண்டிருக்கிறது. கே.ஆர்.எஸ் அணையின் உயரம் 124.80 அடி. அதில், தற்போதைய நீர் இருப்பு 105.40 அடி. கபினி அணை 65 அடி உயரம். அதில், 63.46 அடிக்குத் தண்ணீர் இருப்பு இருக்கிறது. இதேபோல, அங்குள்ள மேலும் 2 அணைகளிலும் போதுமான அளவைக் காட்டிலும் அதிகமாகவே நீர் இருப்பு தேக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், மேட்டூர் அணைக்கு இதுவரை 4,047 கன அடிக்குத் தண்ணீர் வந்திருக்கிறது.
இது குறித்து, நேற்று மாலை முதலமைச்சர் என்னிடம் பேசினார். இன்றைக்கு நிலைமை, அங்குத் தண்ணீர் அதிகமாக வந்துக்கொண்டிருக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து முதலமைச்சரின் தொலைபேசி அழைப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். ’’ என்றவரிடம், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, `காவிரி விவகாரம், தமிழ்நாடு விவசாயிகளைப் பற்றியெல்லாம் தி.மு.க அரசு கவலைப்படுவதில்லை. ஸ்டாலினுக்குக் கூட்டணிதான் முக்கியம்’ என்று விமர்சனம் செய்திருக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன?’’ என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்கு, பதிலளித்த துரைமுருகன், “கூட்டணி என்பது வேறு. அவரவர் பிரச்னைகள் என்பது வேறு. தாயாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும் `வயிறு’ வேறுதானே!. எடப்பாடிக்கு காவிரி விவகாரம் பற்றியெல்லாம் அதிகமாகத் தெரியாது. காவிரி வரலாற்றை ஆரம்பத்தில் இருந்து, அதாவது 1971-ம் ஆண்டில் இருந்து படித்துக்கொண்டு வருகிறேன். எப்போதெல்லாம் அமைச்சராக இருந்தேனோ… அப்போதெல்லாம் நான் இந்தத் துறையைத்தான் எடுத்திருக்கிறேன். நீண்டநெடிய காவிரி பிரச்னையில், என்னால் முடிந்த அளவுக்குத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து வருகிறேன். கர்நாடக அரசு, சுப்ரீம் கோர்ட்டையே மதிப்பதில்லை. இப்போது, `கொடுக்க மாட்டேன்’ என்றாலும், இன்னொரு `மழை’ அதிகமாக பெய்தால் போதும். நாம் `வேண்டாம்’ என்றாலும் கொடுத்துவிடுவார்கள்’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88