மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வரும் ஒருவரின் மகளை, அதே பகுதியில் வசிக்கும் மராத்தா சமுதாயத்தை சேர்ந்த கஜானன் என்பவர் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பூசாரியாக பணியாற்றி வருபவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் ஆவார். அவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதி கஜானன் மனைவியின் தந்தைக்கு உடம்புக்கு சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் வந்து பார்க்கும்படி தகவல் வந்தது. உடனே அப்பெண் தனது குழந்தையை கணவரிடம் விட்டுவிட்டு தந்தையை பார்க்க ராஜஸ்தான் சென்றார். ஆனால் அதன் பிறகு அப்பெண் வீடு திரும்பவில்லை. கஜானன் தனது மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிடவேண்டுமென்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில் தனது மனைவியை அவரது தந்தை கடத்திச் சென்று ராஜஸ்தானில் உள்ள ஜலோர் என்ற இடத்தில் அடைத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் ராஜஸ்தானில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் பெண்ணை மீட்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கேட்டுக்கொண்டது. பெண்ணை தேடிச்சென்ற போலீஸார் ராஜஸ்தானில் அப்பெண் கிடைக்காமல் வெறும் கையுடன் வந்தனர்.