கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில்தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து கல்வராயன் மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம். அந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதிகளுக்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டது. அந்த அறிக்கையை படித்த நீதிபதிகள், “கல்வராயன் மலையில் வாகனங்கள் செல்லும் வகையில், சாலை வசதிகள் முழுமையாக இல்லை. ஆம்புலன்ஸ்கள் செல்லும் வகையில் சாலை வசதிகள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் மலைவாழ் மக்களுக்கு எதிராக வனத்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்யக் கூடாது” என்று கூறினர்.
தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், “மலைவாழ் மக்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அங்கு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த பணிகளை முடிக்க அவகாசம் வேண்டும்” என்றார்.
அதையடுத்து, “கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க, நான்கு வாரங்களில் அரசு சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும். சாலை வசதிகள், பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கல்வராயன் மலையில் மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசு தரப்பில் விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.