மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது. கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை தான்.
ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு தி.மு.க-வினர் கொடுத்த ஆதரவு தான். கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ.வேலுவின் ஆதரவாளரான, ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர்.