கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் : 10-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை? – கலெக்டர், எஸ்.பி மாற்றம்! | action taken against kallakurichi district collector and superintendent of police

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இன்று (19-6-2024) கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, கள்ளக்குறிச்சி வட்டத்தில்‌, கருணாபுரம்‌ காலனியைச்‌ சேர்ந்த 26 நபர்கள்‌ வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல்‌ போன்ற உபாதைகள்‌ இருப்பதாகத்‌ தெரிவித்து, கள்ளக்குறிச்சி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தனது அறிக்கையில்‌ தெரிவித்துள்ளார்‌.

காவல்‌துறை மற்றும்‌ வருவாய்த்‌ துறையினர்‌ மேற்கொண்ட விசாரணையில்‌, மேற்படி நபர்கள்‌ பாக்கெட்‌ சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும்‌ என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில்‌ திரு.பிரவின்குமார்‌, வயது 26, நேற்று அதிகாலை 3 மணியளவில்‌ வயிற்று வலியின்‌ காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்‌. மேலும்‌, திரு சுரேஷ்‌, வயது 40 மற்றும்‌ திரு சேகர்‌, வயது 59 ஆகியோரும்‌ சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும்‌ அவர்களின்‌ உடல்கள்‌, உடல்‌ கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின்‌ காரணம்‌, உடல்‌ கூறாய்விற்குப்‌ பின்பு தெரியவரும்‌.

மேற்கண்ட 26 நபர்களில்‌, வடிவு மற்றும்‌ கந்தன்‌ ஆகிய இருவரும்‌ சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில்‌, மற்ற அனைவருக்கும்‌ கள்ளக்குறிச்சி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம்‌ மருத்துவக்‌ கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக்‌ கொண்ட மருத்துவர்‌ குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்‌.

இந்த மருத்துவக்‌ குழு, பாதிக்கப்பட்ட நபர்களுக்குச்‌ சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல்‌, சேலம்‌ மற்றும்‌ திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும்‌, சிறப்பு மருத்துவர்‌ குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்‌. மேலும்‌, 18 நபர்கள்‌ அவசரகால ஊர்தியின்‌ மூலமாக புதுச்சேரி ஜிப்மர்‌ மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்‌. 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம்‌ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்‌. 12 அவசர கால ஊர்திகள்‌ கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவனையில்‌ தயாராக வைக்கப்பட்டுள்ளது.

மேல் சிகிச்சைக்குத்‌ தேவையான அனைத்து மருந்துகளும்‌, விழுப்புரம்‌, சேலம்‌, திருவண்ணாமலை மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத்‌ திட்ட இயக்குநர்‌ திரு.கோவிந்தராவ்‌, இஆ,.ப., மற்றும்‌ மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌ ஆகியோர்‌ கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்‌. மேலும்‌, பாக்கெட்‌ சாராயம்‌ விற்ற கோவிந்தராஜ்‌ என்கிற கண்ணுகுட்டி, வயது 49 என்ற நபர்‌ காவல்‌துறையினரால்‌ கைதுசெய்யப்பட்டுள்ளார்‌. அவரிடமிருந்து 200 லிட்டர்‌ கள்ளச்சாராயம்‌ கைப்பற்றப்பட்டு, அவை விழுப்பும்‌ மண்டல தடய அறிவியல்‌ ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, சோதனையில்‌, அதில்‌ மெத்தனால்‌ கலந்துள்ளதாகக்‌ கண்டறியப்பட்டுள்ளது.

மாண்புமிசூ முதலமைச்சர்‌ அவர்களுக்கு இந்த சம்பவம்‌ பற்றிய தகவல்‌ தெரிய வந்ததுடன்‌, உடனடியாக மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும்‌ பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ திரு.எ.வ.வேலு மற்றும்‌ மாண்புமிசூ சுகாதாரத்‌துறை அமைச்சர்‌ திரு.மா.சுப்பிரமணியன்‌ ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச்‌ சென்று சிகிச்சை பெற்று வரும்‌ நபர்களுக்குத்‌ தேவையான அனைத்து உதவிகளையும்‌ செய்வதற்சூ உத்தரவிட்டுள்ளார்கள்‌. இச்சம்பவம்‌ தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்‌ திரு.ஷ்ரவன் குமார்‌ ஜடாவத்‌ உடனடியாகப்‌ பணியிடமாற்றம்‌ செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திரு.எம்‌.எஸ்‌.பிரசாந்த்‌ அவர்கள்‌, புதிய மாவட்ட ஆட்சித்‌ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்‌.

மேலும்‌, கள்ளக்குறிச்சி மாவட்டக்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு சமய்‌ சிங்‌ மீனா, இகா.ப அவர்கள்‌ தற்காலிக பணிநீக்கம்‌ செய்யப்பட்டு, திரு. ரஜத்‌ சதுர்வேதி அவர்கள்‌ கள்ளக்குறிச்சி மாவட்டக்‌ காவல்‌ கண்காணிப்பாளராகப்‌ பணியமர்த்தப்பட்டுள்ளார்‌. அதோடு மதுவிலக்கு அமலாக்கப்‌ பிரிவைச்‌ சேர்ந்த, காவல்‌ துணைக்‌ கண்காணிப்பாளர்‌ திரு. தமிழ்செல்வன்‌, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்‌ பிரிவு காவல்‌ நிலைய ஆய்வாளர்‌, திருமதி கவிதா, திருக்கோவிலூர்‌ மதுவிலக்கு அமலாக்கப்‌ பிரிவு காவல்‌ நிலைய ஆய்வாளர்‌, திருமதி பாண்டி செல்வி, திருக்கோவிலூர்‌, உதவி காவல்‌ ஆய்வாளர்‌ பாரதி மற்றும்‌ அப்பகுதி காவல்‌ நிலைய ஆய்வாளர்‌ திரு ஆனந்தன்‌, திரு ஷிவ்சந்திரன்‌, உதவி ஆய்வாளர்‌, காவல்‌ நிலைய எழுத்தர்‌ பாஸ்கரன்‌, சிறப்பு காவல்‌ உதவி ஆய்வாளர்‌. திரு மனோஜ்‌, காவல்‌ துணை கண்காணிப்பாளர்‌, திருக்கோவிலூர்‌ ஆகியோரும்‌ தற்காலிக பணி நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இவ்வழக்கினை தீர விசாரிக்கவும்‌, தக்க மேல்நடவடிக்கைக்காகவும்‌, உடனடியாக CBCID வசம்‌ ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்கள்‌.” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *