கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகமானதற்கு காரணம் இதுதான்..!' – மா.சுப்பிரமணியன்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 17 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களைப் பார்வையிட வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் துரைராஜை சந்தித்து, பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அசம்பாவிதத்தால், 9 பெண்கள், ஒரு திருநங்கை உள்ளிட்ட 168 பேர் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த சம்பவம் நடைபெற்ற ஓரிரு மணி நேரத்தில் தமிழக முதல்வர் அவர்கள், என்னையும், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி போதுமான மருத்துவ வசதிகளை செய்து தரும்படி அறிவுறுத்தினார். சம்பவம் நடைபெற்ற இரண்டு ஊரைச் சேர்ந்தவர்கள், மருத்துவமனைக்கு வராமல், தங்களது வீடுகளிலேயே இருந்தனர். உடனே மாவட்ட சுகாதார அலுவலர் தலைமையிலான குழு மூலம் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தற்போது வரை 48 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதேபோல பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்குச் சென்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், ரூ 10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். திருவண்ணாமலை, திருச்சி, சேலம், விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 67 மருத்துவர்கள், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், களப்பணியாளர்கள் என மொத்தம் 220 பேர் முழுநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, 600 படுக்கைகளுடன் கூடிய பெரிய மருத்துவமனை. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்யேகமாக மேலும் 50 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றது. மெத்தனால் பாதிப்புக்குள்ளாவர்களுக்கு உடனடியாக பார்வை பறிபோகும். இருதயம், சிறுநீரகம், கல்லீரல் படிப்படியாக செயலிழக்கும் என்பதால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பல்வேறு வகையான சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

மது அருந்தியவர்களின் உடலுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க ஆரம்பித்த பிறகுகூட, அவர்கள் மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதால்தான் அதிக உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்தது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 9 பேர் அவசர சிகிச்சை வார்டிலும், 8 பேர் பொது வார்டிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கும் மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையை அளித்து வருகின்றனர். அதேபோல சேலத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 31 பேரில், 23 பேர் நல்ல முறையிலும், 8 பேர் கவலைக்கிடமான நிலையிலும் இருக்கின்றனர்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஒமேப்ரஸோல் மருந்து கையிருப்பில் இல்லை என்று குற்றம்சாட்டினார். ஆனால் உடனே நான் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அனைத்து படுக்கைகளிலும் அந்த மாத்திரை கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் 4.42 கோடி மாத்திரைகள் கையிருப்பில் இருக்கிறது. இவ்வளவு மருந்து கையிருப்பில் இருக்கும்போது, பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பேசுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல. அதேபோல மருந்துகள் பற்றாக்குறை என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதும் தவறான தகவலாகும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

கள்ளச்சாராயத்துக்கான மெத்தனால் எங்கிருந்து வந்தது என தமிழகச் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக விளக்கியுள்ளார். ஆகவே புதுச்சேரியில் இருந்து வந்தது என தமிழக அரசு எப்போதும் குற்றம்சாட்டவில்லை. புதுச்சேரியும் தமிழகத்தின் அங்கம்தான். ஏற்கெனவே மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி தற்போதைய சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பண்ருட்டியில் 53 பேர் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தனர்.

அதில் 200 பேருக்கு பார்வை பறிபோனது. குஜராத்தில் 7 ஆண்டுகளில் 8 கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்துள்ளன. அதற்காக அந்த மாநில முதல்வர்களை யாரும் பதவி விலக சொல்லவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி, மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் பட்டியலின மக்கள். அவர்களுக்கு அரசு வழங்கும் மனிதாபிமான நிவாரண உதவியை, அரசியலாக்கி விமர்சிப்பது சரியல்ல” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *