தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்பி சம்பித் பத்ரா, “தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் பருகி 56 (இப்போது 60) பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு முக்கியமான பிரச்னை. மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் தி.மு.க-வினர் உட்பட இந்தியா கூட்டணியினர் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மத்திய அமைச்சர் நட்டா எழுதிய கடிதத்தில், “கள்ளக்குறிச்சியில் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி அமைதி காக்கிறது. ஏராளமான பட்டியலினத்தவர்கள் உயிரிழந்துள்ள போதும் காங்கிரஸ் மெளனமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்?. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல், பிரியங்கா நேரில் சந்திக்குமாறு மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மெளனம் காப்பதற்குப் பதிலாகத் தைரியமாகக் குரல் எழுப்ப முன் வர வேண்டும். ராகுல் மற்றும் பிரியங்கா குரல் எழுப்பாதது ஏன்?” எனக் கொதித்துள்ளார்.
மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கள்ளச்சாராய பலிக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை கூட விடாமல் மெளனம் காப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. கார்கே, ராகுல் எங்கே போனார்கள். ராகுலிடம் இருந்து ஒரு அறிக்கை கூட வெளிவரவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதேபோல் பாஜக தலைவர்கள் பலர் கள்ளச்சாராய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சீண்டிருக்கிறார்கள்.
மறுபக்கம் இதற்கு எதிர்வினையாற்றி இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி இதுவரை பேசவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியில் பேசியுள்ளார். ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி தொலைப்பேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவைப்பட்ட உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.
மேலும், சம்பவத்தால் பெற்றோர்களை இழந்த 45 குழந்தைகளின் படிப்பு செலவைக் காங்கிரஸ் ஏற்கும் என்றும் அறிவிக்கக் கூறினர். சட்டமன்ற உள்ளிட்ட மக்கள் மன்றத்தில் தினந்தோறும் மக்களுக்காகப் போராடிக் கொண்டுதான் வருகிறோம். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ மாநிலத்திற்குள் விசாரணை நடத்த இயலாது. இந்த அடிப்படை அரசியல் ஞானம் இல்லாதவராக அண்ணாமலை உள்ளார். மலிவான அரசியல் மேற்கொள்வதில் முதன்மையானவர் அண்ணாமலை தான். தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவது அவரவர் உரிமை. எனவே அதற்கான அனுமதி காவல்துறை தான் வழங்க வேண்டும். தேவையெனில் இது குறித்து சட்டமன்றத்தில் பேசுவேன்” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “நீட் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. நாடாளுமன்றத்தையே உலுக்கப் போகிறது. பல மாநிலங்களில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. எனவே அதை மறைப்பதற்காக மாநிலத்தில் நடக்கும் பிரச்னையைப் பற்றிப் பேசி திசை திருப்புகிறார்கள் குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு சிபிஐ விசாரணை நடத்தினீர்களா.. இழப்பீடு கொடுத்தீர்களா.. பிறகு கள்ளச்சாராய மரணம் தொடர்பாக பா.ஜ.க-வுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?. நீங்கள் சிபிசிஐடி விசாரணையை நம்பாத போது, நாங்கள் எப்படி சிபிஐ விசாரணையை நம்ப முடியும்.
குஜராத்தில் பாலம் இடித்து பலர் இறந்ததற்கு சிபிஐ விசாரணையா நடத்தினீர்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக கேள்வி கேட்பது, ஆளுநரைச் சந்திப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தேசிய அளவில் ஏன் பேசுகிறீர்கள். காங்கிரஸை சங்கடப்படுத்த வேண்டும் என்பதற்காகச் செய்கிறீர்கள். தமிழகத்தில் காங்கிரஸ் சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாநில தலைவர் சம்பவ இடத்துக்குச் செல்கிறார். ஆறுதல் கூறியிருக்கிறார். மணிப்பூரில் ஓராண்டுக்கு மேலாகக் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். அங்குச் செல்வதற்குப் பிரதமருக்குத் தைரியம் இல்லை. அப்படி இருக்கும் போது காங்கிரஸை தலைவர்களை கள்ளக்குறிச்சி சென்று பார்க்கச் சொல்ல உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது” என்றார் காட்டமாக.!
காங்கிரஸ் கட்சியின் பிரதான கூட்டணியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில் நடந்த சம்பவம் என்பதால், கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்த அல்லது, காங்கிரஸுக்கு சங்கடத்தை ஏற்படுத்த பாஜக இந்த யுக்தியை கையாள்கிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88