கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் தருவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அரசு அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்தார்.
தமிழக அரசு அதிகாரிகள் கள்ளச்சாராய வியாபாரிகளோடு கைகோர்த்து செயல்படுவதாக குற்றம்சாட்டிய பிரேமலதா, அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தால் மட்டும் கள்ளச்சாராய விவகாரத்தில் தீர்வு கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பார்க்காதது ஏன் என்றும் பிரேமலதா கேள்வி எழுப்பினார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் தருவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் பிரேமலதா கூறினார்.
.