குறிப்பாக, கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவித்திருக்கிறார். இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ரூ.50,000-ம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும், அவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையையும் அறிவித்திருக்கிறார். அதில் பலரின் குடும்பத்தினருக்கும் நேரில் சென்று நிவாரண நிதியை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இது மிகப்பெரிய விமர்சனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.


சாதாரணமாக சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, கட்டடம் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கெல்லாம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் மட்டுமே தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. வயிற்றுப் பிழைப்புகாக உயிரைப் பணயம் வைத்து வேலைசெய்து எதிர்பாராத விபத்தில் உயிரிழக்கும் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்குகூட நிவாரண நிதியாக வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார். அதேபோல சமீபத்தில் வெளிநாட்டுக்கு பிழைப்புக்காகச் சென்று குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் அறிவித்தார்.


ஒரு விபத்துக்கே சில லட்சங்களில் மட்டும் நிதி ஒதுக்கும் முதலமைச்சர், குற்றச்செயல் செய்து உயிரிழந்தவர்களுக்கு அதிகபட்ச நிதி அறிவிப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பதும், வாங்கி அருந்துவதும் சட்டப்படி குற்றம். அப்படி, சட்டவிரோதமாக உடலுக்குத் தீங்கு என்று தெரிந்தும்கூட கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்த 55 பேரின் குடும்பத்தினருக்கு அரசு கஜானாவிலிருந்து கோடிக்கணக்கில் நிவாரணம் அறிவிப்பது எந்த வகையில் நியாயம்? என சமூக ஆர்வலர்களும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.