கள்ளர் சமூகத்தினர் அதிகளவில் இருக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் இருக்கும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகச் சமீபத்தில் பேச்சுக்கள் அடிபட்டன. அதையடுத்து, மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், தமிழ்நாடு அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், அவ்வாறு வெளியான செய்திகள் தவறானவை என்றும், அப்பள்ளிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகச் சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.