அமைச்சரவை மாற்றம், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் என அறிவாலயமே பரபரத்துக்கொண்டிருக்கும் சூழலில், தங்களின் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவும் பதவியில் இல்லாதவர்கள் தங்களுக்கான இடத்தைப் பிடிக்கவும் எதேதோ செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கொங்கு மண்டல தி.மு.க புள்ளிகளோ, அ.தி.மு.க-வில் அதிருப்தியோடு இருக்கும் நிர்வாகிகளையும், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களையும் தி.மு.க-வுக்குத் தூக்க தீயாய் வேலை செய்கிறார்களாம்.
அதற்குத் தலையாட்டியிருக்கும் அ.தி.மு.க புள்ளிகள் சிலர், “கொஞ்சம் டைம் கொடுங்க. எங்க கட்சியில பெரிய அளவுல நிர்வாகிகள் மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க. என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு முடிவெடுக்கிறோம்” என்று கால அவகாசம் கேட்டிருக்கிறார்களாம். இதையறிந்து பதறிப்போன கொங்கு மண்டல சீனியர்கள், தங்கள் மந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் ர.ர-க்கள்!