தி.மு.க இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில், கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்றுகொண்டிருக்கிறது. ‘இரண்டு வாரங்களாகக் கூட்டம் நடத்துகிற அளவுக்கு அப்படி என்ன ஆலோசனை செய்கிறார்கள்?’ என விசாரித்தால், “தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நிர்வாக ரீதியில் எந்தப் பணியும் செய்ய முடியாது. எனவே, இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகளுக்குச் சுற்றுலாவும் சென்று திரும்பிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். அடுத்து என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருக்கும்போது, ‘இளைஞரணிக்கு நிர்வாகிகளை நியமித்து ஓராண்டு ஆகிவிட்டது. அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யலாம்.
அரசியலில் ஆக்டிவ்வாக இருப்பதுபோலக் காட்டிக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்’ என்று சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்தே மண்டலவாரியாக ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கிறார் உதயநிதி. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதாக இருந்தால், அன்றைய நாளில் ஆலோசனைக் கூட்டத்துக்கு லீவும் விடப்படுகிறது. அதனால்தான் இத்தனை காலம் எடுக்கிறது” என்கிறார்கள் குறிஞ்சிவாழ் நிர்வாகிகள்!
மேற்கு மண்டலத்தின் முக்கிய மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கனிம வளக் கடத்தல் விவகாரத்தில், துறையின் மேலிடத்தின் பெயரைச் சொல்லி, தனியார் கம்பெனி ஒன்று வெளிப்படையாக வசூல் செய்துவந்தது. கம்பெனி, மேலிடத்துக்கு ஒழுங்காகக் கப்பம் கட்டாததால், அந்தப் பகுதி மாமூல் வசூல் விவகாரத்தை மன்னர் பெயரைக்கொண்ட மணல்புள்ளியிடம் ஒப்படைத்தது துறை மேலிடம். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனிம வளக் கொள்ளை, தற்போது மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. இந்த நிலையில், மன்னர் பெயர்கொண்ட மணல்புள்ளிமீது புகாருக்கு மேல் புகார் வாசித்து, மீண்டும் கனிம வள மாமூல் பொறுப்புகளைப் பெறுவதற்குத் தீவிரமாக முயன்றுவருகிறார், அந்த இரண்டெழுத்து கம்பெனியைச் சேர்ந்த குமாரப்புள்ளி. இதற்காக, துறை மேலிடத்துக்கும் அட்வான்ஸாக 50 லட்டுகளைக் கொடுத்திருக்கிறாராம். டீல் ஓ.கே-யானால், மாதம் சுமார் 10 ஸ்வீட் பாக்ஸுகள் வரை கொடுப்பதாகவும் உறுதியளித்திருக்கிறாராம். இதனால், விரைவில் மாமூல் பொறுப்புகள் கை மாறும் என்கிறார்கள்!
வறட்சி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளருக்கும், பொறுப்பு அமைச்சருக்கும் நடக்கும் பனிப்போர் உச்சத்தை எட்டியிருக்கிறது. “கட்சி நிகழ்ச்சிகள் தொடங்கி, அரசு நிகழ்ச்சிகளுக்குக்கூடத் தன்னை அழைப்பதில்லை. சமூகரீதியிலும் அந்த மா.செ குடைச்சல் கொடுக்கிறார்” எனக் கடுப்பிலிருக்கும் அமைச்சர், தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிவந்தார். இந்த நிலையில், தற்போது “நாடாளுமன்றத் தேர்தலில், தன்னுடைய சமூகம் சார்ந்து எவ்வளவு வாக்குகள் வரும், அந்த மா.செ சமூகம் சார்ந்து எவ்வளவு வாக்குகள் வரும் என மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பிவிட்டேன். இன்னும் கொஞ்ச நாளுக்குத்தான் அவரது ஆட்டம் இருக்கும். பிறகு இந்த மாவட்டத்துக்குப் பொறுப்பு அமைச்சர் மட்டுமல்ல, மா.செ-வும் நான்தான். இதற்காக மேலிடத்து வாரிசிடமும் பேசிவிட்டேன்.
அவரும் உறுதியளித்திருக்கிறார்” எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் பெருமை பேசிக்கொண்டிருக்கிறாராம். மா.செ தரப்பும் அமைச்சருக்கு எதிரான தகவல்களை அறிவாலயத்துக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டிவருகிறதாம். “ஜூன் 4-க்குப் பிறகு, இன்னும் பல குஸ்திகளை இங்கே பார்க்கலாம்” என்கிறார்கள் அந்தப் பகுதி உடன்பிறப்புகள்!
மன்னர் பெயர்கொண்ட அந்த அமைச்சர் விடுமுறையைக் கழிக்க, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினருடன் ஜில் மாவட்டத்திலுள்ள முக்கியமான இயற்கையிடம் சரணடையும் இடத்துக்குச் சென்று டேரா போட்டிருக்கிறாராம். கடந்த முறை அமைச்சர் தரப்பு அங்கு செய்த அடாவடியிலிருந்து இன்றுவரை மீளாத ஒரு தனியார் கெஸ்ட் ஹவுஸ் நிர்வாகம், ஏதேதோ காரணத்தைச் சொல்லி, இந்த முறை அமைச்சருக்குத் தங்க இடம் தர மறுத்துவிட்டதாம். “தேர்தல் முடிவுகள் வரட்டும். இதற்கான பலனை அனுபவிப்பீர்கள்” எனக் கடுப்பாக அங்கிருந்து கிளம்பிய அமைச்சர், அருகில் இருந்த மற்றொரு தனியார் காட்டேஜில் தஞ்சம் புகுந்திருக்கிறார். இந்த நிலையில், பகலில் ஆட்டம், பாட்டம் என நண்பர்களுடன் குதூகலமாக இருந்துவிட்டு, இரவில் சட்டத்துக்குப் புறம்பாக நைட் சஃபாரி செல்ல வேண்டுமென அதிகாரிகளிடம் அடம்பிடிக்கிறாராம் அமைச்சர். சட்டச் சிக்கல்களை எடுத்துச்சொல்லி அதிகாரிகள் தரப்பும் அமைச்சரின் ஆசைக்கு அணைகட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறதாம். ‘’அமைச்சர் தங்கியிருக்கும் காட்டேஜும் சட்டத்துக்குப் புறம்பாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அமைச்சர் நைட் சஃபாரி சென்று ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், ஒட்டுமொத்தமாக எல்லோரும் மாட்ட வேண்டும். ஆனால், மதிகெட்ட அமைச்சருக்கு எதுவுமே புரியவில்லையே… என்ன செய்வது?” எனப் பதறுகிறார்களாம் அதிகாரிகள்!
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஐ.ஜி ஒருவர், இன்னும் சில தினங்களில் ஓய்வுபெறவிருக்கிறார். இவர்மீதான பாலியல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை ஓய்வுபெற அனுமதிப்பது தொடர்பாக கோட்டையிலும், காவல்துறை மேலிடத்திலும் தீவிர ஆலோசனை நடந்துவருகிறதாம். இதற்கிடையே சம்பந்தப்பட்ட அதிகாரியோ, ‘ராஜேஷ் தாஸைப் பின்பற்றி கட்டாய ஓய்வுபெற’ யோசித்துவருகிறாராம். இந்த விவகாரத்தில் புகாரளித்த பெண் எஸ்.பி-யோ, “முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் வழக்கில், மேலிடம் காட்டிய ஆர்வத்தை என்னுடைய வழக்கில் காட்ட மாட்டேன் என்கிறார்கள். புகாருக்குள்ளானவர் பணி ஓய்வே பெறப்போகிறார். அதற்குள்ளாவது உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லையே…” எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிவருகிறாராம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88