பழக்கட்சியில் பெரியவருக்கும் சின்னவருக்குமான ஈகோ மோதலில், கடுமையாகப் பாதிக்கப்படுபவர் ‘மணியான’ தலைவர்தானாம். அப்பாவின் விசுவாசி என்பதால், அப்பா மீதான கோபத்தையும், எரிச்சலையும் இவரிடம் காட்டுவதையே வழக்கமாக வைத்திருக்கிறாராம் சின்னவர். “கட்சி தொடங்கிய நாளிலிருந்து உடனிருக்கிறேன். பெரிதாக பதவி சுகத்தை அனுபவிக்கவில்லை என்றாலும் இதுவரை ‘கவுரமாக’த்தான் இருந்தேன். ஆனால் சமீபகாலமாகவே, சின்னவர் பொதுவெளியில் மீண்டும் மீண்டும் என்னை அவமானப்படுத்துகிறார்!” என்று தோட்டத்துத் தரப்பிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார் ‘மணியான’ தலைவர். அதற்கு, ‘கட்சிரீதியான முடிவை சின்னவர் எடுக்கும்போது, நீங்க ஏன் தேவையில்லாம மூக்கை நுழைக்கிறீங்க. அதான் அவருக்குக் கோபம். நீங்க பாட்டுக்கு அமைதியா இருங்க. அவர் ஒண்ணுமே செய்யமாட்டாரு!’ என்று அட்வெஸ் செய்திருக்கிறார்களாம் தோட்டத்துக்காரர்கள்!
எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒரு பக்கம் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, மறுபக்கம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக யார் யாரைத் தேர்வுசெய்யலாம் என்கிற பேச்சும் நடக்கிறதாம். அதன்படி, உசிலம்பட்டி தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரனின் பெயரை சிபாரிசு செய்தாராம் முன்னாள் அமைச்சர் உதயகுமார். ஏனென்றால், இப்போது சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஐயப்பன், ஓ.பி.எஸ் அணிக்குச் சென்றுவிட்டார்.
உதயகுமாரின் சிபாரிசு குறித்து கேள்விப்பட்ட உதயகுமாருக்கு எதிர் டீம், “ஓ.பி.எஸ் பக்கம் தாவிய அய்யப்பனே, உதயகுமார் தேர்வுசெய்த ஆள்தான். அவர் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் யாரும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள். அதுவும், அவர் இப்போது பரிந்துரைத்திருக்கும் மகேந்திரன், நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலிலும் சரியாக வேலை பார்க்காதவர். அவரது சொந்த பூத்திலேயே அ.தி.மு.க குறைவாகத்தான் ஓட்டு வாங்கியிருக்கிறது” என்று தலைமையிடம் தூபம் போட்டுவிட்டார்களாம். இதனால், ஏக கடுப்பில் இருக்கிறாராம் உதயகுமார்!
‘செல்வமான’ சீனியர் அமைச்சர் ஒருவர், அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார். துறை சார்ந்து அவரோடு வெளிநாட்டுக்குப் பறந்திருக்கும் மூத்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ஷாப்பிங் என்ற பெயரில் பொருள்களை அங்கே வாங்கிக் குவிக்கிறாராம். அமைச்சரும் இதற்குப் பச்சைக்கொடி காட்டியதால், பெரியளவில் பர்ச்சேஸ் செய்துவிட்டாராம் அந்தப் பெண் அதிகாரி. இந்த ‘ஷாப்பிங் செலவுக் கணக்குகள் அனைத்தையும், பயணச் செலவோடு சேர்த்திருப்பதால், செலவுக் கணக்கை நிதித்துறையிடம் தாக்கல் செய்யும்போது பிரச்னை வெடிக்க வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!
படிப்பு விஷயமாக விரைவிலேயே வெளிநாட்டுக்குப் பறக்கவிருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலையின் பதவியைக் கைப்பற்ற, நயினார் நாகேந்திரன் டெல்லியில் காய்நகர்த்துகிறாராம். இதையறிந்த கமலாலய சீனியர்கள் சிலர், “இது முக்கியமான சமயம், நாடாளுமன்றத் தேர்தலின்போது நெல்லைத் தொகுதியை இழந்ததுபோல, தலைவர் நாற்காலியையும் நயினாருக்கு விட்டுக்கொடுத்துடாதீங்க!” என்று தமிழிசைக்கு கீ கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.
கூடவே, “பிரஸ் மீட்டால் வளர்ந்த கட்சிக்கு, மைக்கைப் பார்த்தாலே பதறி ஓடும் நயினார் சரிப்பட்டு வரமாட்டார். ஏற்கெனவே தலைவராக இருந்த தமிழிசைக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்று சீனியர்கள் சிலர் இணைந்து டெல்லிக்கும் ஓலை ஒன்று அனுப்பியிருக்கிறார்களாம்!
அண்டை மாநிலங்களில் அளவுக்கு அதிகமான மழை கொட்டித் தீர்த்துவருவதால், தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதனால், மேட்டூர் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியிருக்கின்றன. அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேமிக்கப்போவதாக மாவட்ட நிர்வாகங்கள் சொன்னாலும், பெரும்பாலான நீர்நிலைகள் முறையாகத் தூர்வாரப்படவில்லை என்பதே உண்மையான நிலவரமாம். நீர்வளத்துறை மேலிடமானது, தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மண் எடுப்பதற்காக, பல நீர்நிலைகளைத் தூர்வாராமல், விவசாயிகளையும் மண் எடுக்க விடாமல் தடுத்துவைத்திருந்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள். “ஏற்கெனவே, காவிரி நீரை தமிழ்நாடு வீணாக்குகிறது என்று சொல்லித்தான், மேக்கேதாட்டூவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு வாதாடிவருகிறது. அவர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழ்நாடு நீர்வளத்துறையே செயல்படுவது வேதனையளிக்கிறது” என்று புலம்புகிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88