கழுகுகள் இறந்த விலங்குகளை உண்டு, அவை சூழலுக்கு நன்மை பயக்கின்றன. ஆனால், இறந்த விலங்குகளை உண்ணும் கழுகுகள் மரணிப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கழுகுகள் அதிகம் உள்ளன. இந்த பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு Nimuslide, Flunixin மற்றும் Carprofen ஆகிய மருந்துகளை சட்டவிரோதமாக அளிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
இம்மருந்து செலுத்தப்பட்ட விலங்குகள் இறக்கும்போது, அதன் மாமிசத்தை உண்ணும் கழுகுகள் மரணிக்கின்றன. எனவே, இம்மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சூர்யகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கழுகுகளை பாதுகாக்க 4 மாவட்டங்களிலும் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், கழுகுகளை பாதுகாக்க நாடு முழுவதும் 80 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளை கழுகுகள் மையங்களாக அறிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசிடம் கேட்டிருக்கிறோம். இன்னும் இது குறித்து எந்த கருத்தையும் அவர்கள் அனுப்பவில்லை. அதோடு கழுகுகளுக்கு ஆபத்து விளைவிக்கும் மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து விளக்கமளித்துள்ள தமிழக அரசு, “கழுகுகள் மரணத்திற்குக் காரணமாக உள்ள மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழுகுகளை பாதுகாக்க மாநில அளவில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மத்திய அரசின் கழுகுகள் பாதுகாப்பு திட்டத்தினை செயல்படுத்தும். அதோடு மருந்துகளைத் தடை செய்வது குறித்து மத்திய அரசுதான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.