பகுஜன் சமாஜ் மாநில தலைவராக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் பிரமுகரும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே கைதான வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அஸ்வத்தாமனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோழவரம் அருகே மோரை என்னும் பகுதியில் நிலம் தொடர்பான தகராறில், ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி அஸ்வாத்தம்மன் துப்பாக்கியை காண்பித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக அஸ்வத்தாமனின் தந்தையான ரவுடி நாகேந்திரன், செல்போனில் ஆம்ஸ்ட்ராங்கை அழைத்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சிறையில் சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் எனவும் அவரது மகன் அஸ்வத்தாமனுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் கொண்டனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இதுதொடர்பாக அஸ்வாத்தமனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமனுக்கு தொடர்பு இருப்பது உறுதியானதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்படும் 22ஆவது நபர் அஸ்வத்தாமன் ஆவர்.
இதையும் படிங்க: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாஷ்நாதன் பதவியேற்பு!
இதனிடையே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அஸ்வத்தாமன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அஸ்வத்தாமனுக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
.