காஷ்மீரில் மீண்டும் தலைதூக்கும் தீவிரவாத தாக்குதல்கள் – மத்திய அரசு சொன்ன ‘அமைதி’ எங்கே?

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், ஐந்து ராணுவத்தினர் காயமடைந்திருக்கிறார்கள். ராணுவ வாகனங்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், கையெறி குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள் பயங்கரவாதிகள்.

ஜம்மு காஷ்மீர்

பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு பாதுகாப்புப் படையினர் மட்டுமன்றி, பொதுமக்களும் பலியாகிவருகிறார்கள். சமீபத்தில், ரியாசி மாவட்டத்தில் சிவ்கோரி கோயிலுக்கு பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அதில், 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். தற்போது, ஸ்ரீநகரின் ஷாஹீன் குஞ்ச் பகுதியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370, மோடி அரசால் 2019-ம் ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டது. அதன் பிறகு, ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாகவும், தொழில் பெருகிவிட்டதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தருப்பதாகவும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தொடர்ச்சியாகக் கூறிவருகிறார்கள்.

மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா.

ஆனால், மத்திய ஆட்சியாளர்களின் இந்தக் கூற்றை முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா உள்பட ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மறுத்துவருகிறார்கள். ‘ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை, இங்கு நிலவுவது அமைதி அல்ல… இது மயான அமைதி’ என்று கூறும் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள், அதற்கு உதாரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த பல சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

சமீபகாலமாக, ஜம்மு பகுதியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், பாதுகாப்புப்படையினரையும் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவருகிறார்கள். இந்த நிலையில்தான், தற்போது குல்காம், சோபியான் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் என்கவுன்டரில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி

கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘ஜம்மு பகுதியில் 48 மணி நேரத்தில் நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் இது. வீரம் மிக்க ராணுவ வீரர்களின் மரணம் பெரும் வேதனையைத் தருகிறது’ என்று கூறியிருக்கிறார். ரஜோரி மாவட்டத்தில் ஜூலை 7-ம் தேதி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘பயங்கரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடி என்பது கடுமையான நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, வெற்றுப் பேச்சுகளும் பொய் வாக்குறுதிகளும் அல்ல’ என்று மத்திய பா.ஜ.க அரசை சாடியிருக்கிறார்.

பிரதமர் மோடி

ஜம்மு கஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ராணுவ தலைமைத் தளபதி, உயரதிகாரிகள் ஆகியோருடன் கடந்த மாதம் ஆலோசனை நடத்தினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அப்போது, ‘பாதுகாப்புப்படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தீவிரவாதத்தை வேரோடு களைய வேண்டும்’ என்று அமித் ஷா அறிவுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுவருகிறது. உச்ச நீதிமன்றமும், ‘2024 செப்டம்பர் மாதத்துக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

அந்தக் காலக்கெடுவுக்கு இன்னும் இரண்டரை மாதங்களே இருக்கும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதால், அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள் எழுப்புகிறார்கள்.

அமித் ஷா, மோடி

பிரிவு 370 நீக்கப்பட்டதை பெரும் சாதனையாக பா.ஜ.க அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த ‘சாதனை’யால் அங்கு அமைதியை நிலைநாட்ட முடியவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 2024 மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதே ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலையும் நடத்தி முடித்திருக்க முடியும். ஆனால், அங்கு அப்போதும் சட்டமன்றத் தேர்தலை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *