திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட ராதாபுரம் -காவல்கிணறு சாலை மிகவும் பழுதடைந்து உள்ள நிலையில், இந்தப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வழியே பயணிக்கிறார்கள். சுமார் 13 கிலோ மீட்டர் உள்ள இந்தச் சாலை, பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாய், சில இடங்கள் முழுவதுமாய் பெயர்ந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
ராதாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, தங்கள் விவசாய பொருள்களை காவல்கிணறு மார்கெட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடிய விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள், அன்றாடத் தேவைகளுக்குப் பயணிப்பவர்கள் என மக்கள் மிகுந்த அச்சத்தோடு இந்தச் சாலையில் பயணிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தச் சாலை கூடன்குளம் அணுமின் நிலையத்தின் (Emergency evacuation way) அவசர கால வெளியேற்ற வழிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாதையில் இரு சக்கர வாகன விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இந்தப் பகுதி மக்களும், சமூக சேவை அமைப்பினர்களும், பல முறை புகார் அளித்தும் அரசு தரப்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
விபத்துகளுக்கு அச்சாரம் போடும் வகையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சாலையை, அதிகாரிகள் உடனடியாகச் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.