`குறைந்த சம்பளம்; பதவி உயர்வு இழுத்தடிப்பு..!’ – குமுறும் தமிழக அரசு மருத்துவர்கள்; பின்னணி என்ன? | Doctors request to tn government on salary and other issues

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகள், மருத்துவக்கல்லுரி சார்ந்த மருத்துவமனைகள், மாவட்ட, தாலுகா, வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் எல்லாம் சேர்த்து சுமார் 19,500 அரசு மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இரவு பகலாக பணியாற்றி தமிழக சுகாதாரத்துறையை இந்தியாவில் முதல் இரண்டு இடங்களில் கொண்டுவந்தாலும் பிற மாநிலங்களில் வழங்குவதைவிட குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக புலம்புகின்றனர் அரசு மருத்துவர்கள். இதற்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக 2009-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி கொண்டுவந்த அரசாணையை தி.மு.க அரசு நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுபற்றி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறுகையில், “மருத்துவர்கள் தமிழக அரசுப் பணியில் இணையும்போது மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ரூ.56,100 ஊதியமாக வழங்கப்படுகிறது. அதன் பின்னர் மத்திய அரசு மருத்துவர்களுக்கு 4-ம் ஆண்டு, 8, 13-ம் ஆண்டுகளில் ஊதிய உயர்வுகளை வழங்குகிறது. பக்கத்தில் உள்ள புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீகார்  உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் நடைமுறை உள்ளது. கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் தகுதிக்கேற்ற ஊதியம் என்ற அடிப்படையில் தமிழக அரசு மருத்துவர்களை விட கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் பணியில் இணைந்த 8-வது ஆண்டு, 15, 17, மற்றும் 20-வது ஆண்டில்தான் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மருத்துவர்கள் 13-வது ஆண்டில் ஊதிய உயர்வு தகுதிபெற்று 1,23,100 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். ஆனால், தமிழக அரசு மருத்துவர்கள் அதே 13-வது ஆண்டில் 83,600 ரூபாய் சம்பளமாக பெறுகின்றனர். இதனால் தமிழக அரசு மருத்துவர்கள் 39,500 ரூபாய் மாதச்சம்பளம் குறைவாக பெறும் நிலைதான் உள்ளது. சுகாதாரத்துறையில் நாட்டில் 25-வது இடத்தில் இருக்கும் பீகார் மருத்துவர்களைவிட, தேசிய அளவில் 2-ம் இடத்தில் உள்ள தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியம் குறைவு.

டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளைடாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை

டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை

இதற்கு தீர்வு ஏற்படுத்த 2009-ல் அன்றைய முதல்வர் கருணாநிதி அரசாணை 354 -ஐ அறிவித்தார். ஆணை பிறப்பிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் அரசு மருத்துவர்களின் ஊதியம் தொடர்பாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட்டு மருத்துவர்களுக்கு உரிய ஊதிய வழங்க வேண்டும் என அந்த அரசாணையில் கூறப்படிருந்தது. அந்த ஆணையை நடைமுறைபடுத்தியிருந்தால் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் எங்களுக்கும் கிடைத்திருக்கும். ஆனால், அந்த அரசாணைப்படி 2012-ம் ஆண்டு கண்துடைப்பாக மறு ஆய்வு நடத்தப்பட்டது. ஊதிய உயர்வு வழங்கவில்லை. அடுத்ததாக  2017, 2022 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்க வேண்டிய மறு ஆய்வுகளை நடத்தவில்லை. கலைஞர் கறுணாநிதியின் அரசாணையை நிறைவேற்றக்கோரி 2020 இறுதியில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வழக்கை வாபஸ் பெறுகிறோம், கருணாந்தி கொண்டுவந்த அரசாணையை நிறைவேற்றுங்கள் என கோரிக்கை விடுத்தோம், போராடியும் பார்த்தோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் கலைஞரின் அரசாணையை 6 வாரங்களில் நிறைவேற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சுமார் 4 மாதங்கள் கடந்த நிலையிலும் அரசாணை நிறைவேற்றப்படவில்லை. கலைஞரால் நிறைவேற்றப்பட்ட அரசாணை தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்படாமல் இருந்தால் எந்த ஆட்சியில் தான் நிறைவேறும் என தெரியவில்லை” என்றார் விரக்தியுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *