கூவத்தில் பறக்கும் பாலம்; காத்திருக்கும் வெள்ள அபாயம்; திராவிட மாடல் அரசின் அடேங்கப்பா ராஜதந்திரம்!

அந்த விஷயத்தைப் பார்த்ததுமே பதறிப் போனோம். பின்னே… ஒவ்வொரு தடவையும் பெருமழையின்போதும் மூழ்கும் சென்னையில் வசித்துக் கொண்டு, உயிரைத் தவிர மற்ற உடைமைகளையெல்லாம் ஒவ்வொரு தடவையும் பறிகொடுக்கும் அப்பாவி பொதுஜனங்களில் ஒருவராக இருக்கும்போது… பார்த்துவிட்டுப் பதறாமல் எப்படி இருக்கமுடியும்? குறிப்பாக, கடந்த ஆண்டின் டிசம்பரில் சென்னையே ஒட்டுமொத்தமாக மூழ்கியபோது பாதிக்கப்பட்ட 99% சதவிகித ஜீவன்களில் நாமும் ஒருவராயிற்றே!

ஆனால், இந்தப் பதற்றம் எதுவுமே நம்மை ஆள்வோர்களுக்கும் அவர்களுக்கு கீழே ஆலோசனைகள் தருவதற்காக உட்கார்ந்திருக்கும் அதிகாரிகளுக்கும் இல்லவே இல்லை என்பதுதான் கொடுமை.

கூவம் ஆற்றில் மண் நிரப்பும் பணி

‘இன்னும் இரண்டு மாதங்களில் மழை வரப்போகிறது. இத்தகைய சூழலில் சென்னையில் ஓடும் கூவம் ஆற்றுக்குள் கல்லையும் மண்ணையும் கொட்டி மூடிக் கொண்டிருக்கிறீர்களே?’ என்று கடந்த 10-05-2024 அன்று பசுமை விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோவும், 13-05-2024 அன்று விகடன் இணையதளத்தில் கட்டுரையும் வெளியிட்டோம். “மூடப்படும் கூவம்… காத்திருக்கும் பெருமழை வெள்ளம்… சென்னையை காப்பாற்றப்போவது யார்?” என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையை வெளியிட்ட கையோடு, சம்பந்தப்பட்ட துறைகளின் (1. முதன்மை செயலாளர், பொதுப்பணித்துறை, 2. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ), 3. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 4. பெருநகர சென்னை மாநகராட்சி, 5. தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் சீரமைப்புத்துறை, 6. சென்னை மாவட்ட ஆட்சியர், 7. தலைமைப் பொறியாளர் (நீர் வள அமைப்பு) மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), பொதுப்பணித்துறை.) அதிகாரிகளுக்கெல்லாம் விரிவான கடிதங்களையும் பதற்றம் விலகாமல் அனுப்பி வைத்தோம்-நடவடிக்கைக்காக.

இவ்வளவு பேருக்கும் தபால் மூலம் புகைப்படங்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களில் தமிழ்நாடு நீர்வளப் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு நிறுவனம் மட்டும், பதில் தந்துள்ளது. தமிழ்நாடு நீர்வளப் பாதுகாப்புத் துறை மற்றும் நதிகள் சீரமைப்புத்துறை கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராதாவிடமிருந்து, 15-05-2024 தேதியிட்டு, நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அசோகனுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தின் நகல் நமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘கழிவுகள் கொட்டுவதை நிறுத்துவதற்கான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்’ என்று ஆணையிடப்பட்டுள்ளது.

கூவம் ஆற்றில் பணி

இதைத் தொடர்ந்து, கடந்த 28-05-2024 அன்று, ‘மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை கூவம் ஆற்றில் நிறைவேற்றுவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை சில உறுதிமொழிகளை இரண்டு நாள்களில் கையெழுத்திட்டுக் கொடுக்கவுள்ளனர். அதற்காக தற்போது பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன’ என்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அறிவித்துள்ளார், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அசோகன்.
ஆனால், பணிகள் எதுவும் நிறுத்தவைக்கப்பட வில்லை என்பதைக் கண்கூடாக பார்த்த நமக்கு… ‘எல்லாமே நடிப்பா கோபால்?’ என்று கேட்கத் தோன்றுகிறது.
‘பாலம் கட்டுவதற்காக கூவம் ஆற்றில் தூண்களை எழுப்புவதற்காக வாகனங்கள் சென்று வரும் வகையில், கட்டடக் கழிவுகளைக் கொட்டி மேடாக்கி வருகிறது. ஆனால், இந்தப் பணிகள் முடிந்தபிறகு கூவத்தை பழையபடி சீரமைத்துத் தரவேண்டும். அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்வளத்துறை மற்றும் மறுசீரமைப்பு மையம் ஆகியவை வகுத்து வைத்திருக்கும் பரிந்துரைகளின்படி அதைச் செய்துதரவேண்டும். வெள்ளத்தால் மக்களுக்கு எந்தவித ஆபத்துகளும் வந்துவிடாத வகையில் சீரமைத்துத் தரவேண்டும். வெள்ளபாதிப்புக்கான நிவாரணம் உள்பட அனைத்துச் செலவுகளையும் தேசிய நெடுஞ்சாலைத்துறையே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேல்மட்ட அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது, இதற்கெல்லாம் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு நாள்களில் எழுத்துப்பூர்வமான ஒப்புதலைத் தருவதாகக் கூறியுள்ளனர்” என்று சொல்லியிருக்கிறார் அசோகன்.
அசோகன் கூறியிருப்பதை நம் பட்டறிவை வைத்து யோசித்துப் பார்த்தால்… ‘பாம்பும் சாகக் கூடாது.. தடியும் நோகக் கூடாது’ என்கிற ராஜதந்திரத்துடன் திராவிட மாடல் அரசு செயல்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, ‘பறக்கும்சாலை பாலப்பணிகள் முடிந்த பிறகு, பழையபடி கூவத்தைச் சீரமைத்துத் தந்துவிட வேண்டும்’ என்று சொல்லியிருப்பதாகவும், அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
இன்னமும் பாலம் கட்டும் பணியையே ஆரம்பிக்கவில்லை. இப்போதைக்கு கூவத்தை மூடும் வேலையைத்தான் செய்துகொண்டுள்ளனர். ஏதோ ஜீபூம்பா வேலைபோல, பாலப் பணிகள் நாளைக்கே முடித்துவிடுவது போலவும், அடுத்த நாளே சீரமைத்துவிடுவதுபோலவும் எப்படித்தான் கூச்சமே இல்லாமல் பேசுகிறார்களோ தெரியவில்லை. எப்படியும் இரண்டு ஆண்டுகளுக்காவது இந்தப் பணிகள் நடக்கும். வேண்டாம், ஆறு மாதங்களிலேயே முடித்துவிடுவார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அடுத்த மாதமே மழை மாதம் ஆரம்பித்துவிடுமே. ‘இந்தத் தடவை அதிக மழையைப் பொழியமாட்டேன்… வெள்ளமும் வராது’ என்று வருண பகவானிடமும் ஏதாவது ஒப்பந்தம் போட்டு வைத்து விட்டார்களோ?  

Chennai Rain

“மொத்தம் 20 கிலோ மீட்டர் நீளம் கூவத்துக்குள் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. அந்த வழியெங்கும் இப்படிக் கட்டடக் கழிவுகளைக் கொட்டியுள்ளனர். இந்தப் பணிகளை எங்கள் அனுமதியைப் பெறாமலேயேதான் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டிருக்கிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நான்கு காவல் நிலையங்களில் எங்கள் தரப்பிலிருந்து கிரிமினல் புகார்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன” என்றும் கூறியிருக்கிறார் அசோகன்.
இதைக் கேட்கும்போது, எங்கே போய் முட்டிக் கொள்வது என்றே தெரியவில்லை.

தங்கத் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை. அதில் குறுக்குமறுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது கூவம். நகருக்குள் எப்படிப் பயணித்தாலும் கூவம் கண்ணில் படுகிறதோ இல்லையோ… மூக்கில் பட்டுவிடும். உடனே திரும்பிப் பார்த்துவிடுவோம். இதில், சுமார் 20 கி.மீட்டர் தூரத்துக்கு ஆற்றுக்குள் கட்டடக்கழிவுகளை கிட்டத்தட்ட ஒரு மாதமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது எதுவுமே இந்த நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் கண்களில்… ஸாரி மூக்கில் படவே இல்லை. சென்னையின் வணக்கத்துக்குரிய மேயராக இரண்டு தடவை… கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக மூன்றாவது தடவை என்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்களிலும் தென்படவில்லை.

மழை பாதிப்புகளை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்

ம்… கொஞ்சம் தெருவில் இறங்கி நடந்தால்தானே தெரியும். அரசாங்க வாகனங்களில், கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கண்ணாடிகளுடன் கூடிய வாகனங்களில் ஏசியைப் போட்டுக் கொண்டு பயணித்தால் கண்ணுக்கும் தெரியாது… மூக்குக்கும் தெரியாது.

சரி, முதலமைச்சர்… மன்னர், உயரதிகாரிகள் எல்லாம்… பிரபுக்கள். அவர்களையெல்லாம் விட்டுவிடலாம் (வேறென்ன செய்ய?). வழக்கம்போல கீழ்மட்ட அதிகாரிகள் இருப்பார்களே… அவர்கள் என்ன செய்தார்கள். குறிப்பாக, இந்த 20 கி.மீட்டர் நீள கூவம் நதியைப் பாதுகாக்கும் பாசன உதவியாளர் (கரைகாவலர்), அவருக்கும்மேலே உதவிப் பொறியாளர் அவருக்கும்மேலே உதவி செயற்பொறியாளர், அவருக்கும் மேலே செயற்பொறியாளர் இப்படி 20, 30 பேர் இருப்பார்களே… அவர்களுக்கு வேலையே அந்த நதியைப் பாதுகாப்பதுதானே. 30 நாள்களாக தேசிய நெடுஞ்சாலைத்துறை என்பது ஆற்றுக்குள் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலமாக கட்டடக் கழிவுகளைக் கொட்டி மூடிக் கொண்டிருக்கும்போது, இவர்களெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்களா? ஆம் என்றால், அவர்கள் மீதெல்லாம் எந்த போலீஸ் ஸ்டேஷனில் கிரிமினல் புகார் கொடுப்பது. அரசாங்க ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால், அதற்கென்று ஒரு சட்டம் வைத்திருக்கிறீர்களே… அரசாங்க ஊழியர் பணியைச் செய்யவில்லை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டம் வைத்திருப்பீர்கள்தானே? ஆம் என்றால், அப்படி ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா… எடுப்பீர்களா?

கூவம்

சரி இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்… ஆபரேஷன் சக்ஸஸ் பேஷன்ட் டெட் என்பதுபோல் ஆகிவிடாமல், உடனடியாகக் கட்டடக்கழிவுகளை கூவத்துக்குள் இருந்து அகற்றி, அடுத்த மாதத்தில் துவங்க இருக்கும் மழையின்போது, சென்னை மாநகருக்கு, குறிப்பாக எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை அனைத்துத் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்துவதுதான் மிகமிக முக்கியம். ஆனால், அதற்கான எந்தவொரு உறுதிமொழியும் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளரின் வார்த்தைகளில் இல்லவே இல்லை. பணிகளை முடித்தபிறகு சீரமைத்துத் தந்துவிட வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்.

இதுபோதாது… மழைக்கு முன்பாக கூவத்தைப் பழையபடி சீரமைத்துத் தருவதை உறுதிப்படுத்த வேண்டும். பறக்கும் பாலத்தின் பணிகளை கூவம் நதியின் நீரோட்டத்தைப் பாதிக்காதவகையில் செய்து முடிப்போம் என்கிற உத்தரவாதத்தையும் தரவேண்டும்.

கூவம் ஆற்றில் மண் நிரப்பும் பணி

மக்களிடம் வரியை இஷ்டம்போல வசூலித்து, அதிலிருந்து சம்பளம், வண்டி, வாகனங்கள் இன்னபிற சலுகைகளை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளும், அரசாங்க அதிகாரிகளும் களத்தில் இறங்கவேண்டும். முக்கியமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கூவத்தை பழையபடி சீரமைப்பீர்களா…. அல்லது வீட்டுக்கு வீடு படகு கொடுப்பீர்களா? எதுவாக இருந்தாலும் கொஞ்சம் மழைக்கு முன்பாகவே சொல்லிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *