குரு பூர்ணிமா நாளில் கைலாசா நாடு எங்கு அமைந்துள்ளது என்று அறிவிப்பேன் என கூறியிருந்த நித்யானந்தா, மீண்டும் தனது சித்து வேலையை காட்டியுள்ளார்… கைலாசா இருக்கு… ஆனா இல்ல… என்ற கதையாக மீண்டும் குட்டையை குழப்பியுள்ளார்… நடந்தது என்ன?
நானே சிவன்… நானே விஷ்ணு என கடவுள் ரேஞ்சுக்கு அளந்துவிட்ட கோக்குமாக்கு சாமியார் தான் இந்த நித்யானந்தா… குற்ற வழக்குகளில் சிக்கி நாட்டை விட்டு தப்பியோடிய நித்யானந்தா, தனக்கென ஒரு தேசத்தை உருவாக்கி உள்ளதாக பெரிய உருட்டுகளை உருட்டி வந்தார்… புலி வருது கதையாக கைலாசா நாட்டை இதோ அறிவிக்கிறேன் என்று அடிக்கடி பேசி, கவனம் ஈர்த்து வந்தார்… குரு பூர்ணிமா நாளில் சொன்ன வாக்கை காப்பாற்றினாரா நித்யானந்தா?
கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா,
அதை இந்து சமயத்தை தழுவிய தேசமாக உருவாக்கி இருப்பதாக தெரிவித்திருந்தார். கைலாசாவுக்கான ஒரு கொடி, நாணயம், ஆட்சி முறை போன்றவற்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், கைலாசா எங்கு உள்ளது என்ற தகவலை மட்டும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தார்.
இந்த சூழலில் தான் குரு பூர்ணிமா நாளில் கைலாசா நாடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று நித்யானந்தா மீண்டும் வாக்குகொடுத்திருந்தார். சொன்னபடி இல்லாமல், கடலோரப் பகுதிகள், மலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு புவியியல் அம்சங்களை உள்ளடக்கி பல்வேறு இடங்களில் கைலாசா உள்ளதாக அளந்து விட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள இறையாண்மை மற்றும் தன்னாட்சி பிரதேசங்களில் ‘கைலாசா’ இருப்பதாக அதன் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 149 நாடுகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கைலாசா இயங்கி வருவதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கைலாசத்தில் 7 அமைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், ஆண் சந்நியாசிகளுக்கான இருப்பிடம் ராமகிருஷ்ணா மடத்தின் அடிப்படையிலும்,
பெண் சந்நியாசிகளின் இருப்பிடம் சாரதா மடத்தின் அடிப்படையிலும், திருமணமானவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள ஆரோவில் போன்ற இருப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளார்.
கைலாசாவில் உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என நித்யானந்தா அறிவித்திருக்கிறார். ராணுவமோ, காவல்துறையோ கைலாசத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ள நித்யானந்தா, கைலாசாவில் வரி விதிப்பு முறை முற்றிலும் இல்லை என பிதற்றியுள்ளார். இருந்த போதும் உலகம் முழுவதில் இருந்தும் கிடைக்கும் நன்கொடைகள் மூலம் கைலாசாவை நிர்வாகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
வேத ஆகமங்களே அரசியல் அமைப்பு என்றும், யாரேனும் தவறு செய்தால் சிறைவாசம் கிடையாது. பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள் தான் பிராயச்சித்தம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு வாடிகன் தலைமையகமாக இருப்பது போன்று, இந்து மதத்தின் தலைமையகமாக கைலாசா இருக்கும் என்று நித்யானந்தா, நம்பிக்கை தெரிவித்துள்ளார். கைலாசாவில் அது இருக்கு, இது இருக்கு என்று கூறிய நித்யானந்தா, கைலாசா எங்கு அமைந்திருக்கிறது
என்பதை மட்டும் கடைசி வரை தெளிவுபடுத்தாமல், மீண்டும் குட்டையை குழப்பியுள்ளார். கைலாசா இருக்கா… இல்லையா… என்பது நித்யானத்தாவுக்கே வெளிச்சம்.
.