திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர். இந்நிலையில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக திருநாவுக்கரசர் இருந்த போது அந்த தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2023-24-ம் நிதியாண்டில் ரூ. 4,60,000 மதிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டது. அந்த நிழற்குடையை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திருநாவுக்கரசர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்தபோது இந்த நிழற்குடையை திறந்து வைக்க முடியாத நிலை இருந்ததாகவும் அதனால் தற்போது பேருந்து நிறுத்த நிழற்குடையை திறந்து வைப்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர்
“பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் உண்மை குற்றவாளிகள்தானா என்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற கொலைச் சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக நாம் கூற முடியாது. எதிர்க்கட்சியினர் இதுபோன்று ஆளுங்கட்சியினர் மீது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறுவது வழக்கம் தான். அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது தி.மு.க-வும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். காவல்துறையினரும், தமிழ்நாடு அரசும் அவர்களது கடமையை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் குரல் கொடுக்கின்றன. பா.ஜ.க நீட் தேர்வை ரத்து செய்வது போன்று தெரியவில்லை. மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால் ராகுல் காந்தி நீட் தேர்வை ரத்து செய்து இருப்பார். மூன்று, நான்கு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு எதிராகத்தான் அரசியல் கட்சியினர் போராடி வருகிறோம். ஆனால், நீட் தேர்வு நடந்து கொண்டு தான் உள்ளது. அதேநேரம், தனியார் நீட் பயிற்சி மையங்களில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்குவதைப் போல அரசு பள்ளிகளிலும் நீட் பயிற்சி மையங்களில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. அறிவித்த நிவாரணத்தை கொடுக்க வேண்டாம் என்று கூறவில்லை. இனிவரும் காலங்களில் விபத்து போன்ற சம்பவங்களுக்கு கொடுக்கும் தமிழ்நாடு அரசின் அதிகபட்ச நிவாரண தொகையை போல அந்த தொகையை நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இதுபோன்ற சம்பவங்களிலும் வழங்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக உள்ளது” என்றார்.