ஆனால், காவிரி, வெண்ணாறு பகுதியில் குறைந்தளவு தண்ணீரே சென்று கொண்டிருக்கிறது. கிளை ஆறுகளிலும் பாசன வாய்க்கால்களிலும் சாதாரண விநியோக மட்ட அளவிற்காகவாவது தண்ணீர் சென்றாக வேண்டும். இதில் தண்ணீர் சென்றால்தான் ஓரளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும். குளங்கள், ஏரிகளில் தண்ணீர் நிறையும். அதனால் கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவினை உடனடியாக உயர்த்தி தர வேண்டும்.
ஒப்பீட்டளவில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பகுதிகளில்தான் விவசாய நிலங்கள் அதிகம். அதனால் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறப்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் மேலாண்மை செய்வதற்கு நீர்வளத்துறை ஏன் திறமையற்றதாக இருக்கிறது என்கிற அவப்பெயர் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படும். அதேபோல் திறக்கும் தண்ணீரில் ஓர வஞ்சனை ஏன் என்ற கேள்வியும் விவசாயிகளிடத்தில் எழுகிறது. உபரி நீர் கிடைக்கும்போதும் உரிய அளவிற்கு கிளை ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லையென்றால் அதற்குரிய விளக்கத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்றார்.
தண்ணீரை கடலுக்கு அனுப்ப இதுதான் காரணமா..?
“‘கொள்ளிடம் ஆற்றில் இப்படி ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு, நேரடியாக கடலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் மிகமிகக் குறைந்த அளவே நீர் செல்கிறது. உண்மையில், இந்த ஆறுகளிலும் முழுக்கொள்ளளவில் நீரைத் திறந்துவிட்டிருந்தால், இந்நேரம் கிட்டத்தட்ட கடைமடைப் பகுதிகளான சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளுக்கே நீர் சென்றடைந்திருக்கும். ஆனால், குறைந்த அளவே திறக்கப்பட்டதால், திருவையாறுக்கே இப்போதுதான் தண்ணீர் வந்துள்ளது. இப்படியிருந்தால், காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாயின் கிளைகளாக இருக்கும் நூற்றுக்கும் மேற்பற்ற சிற்றாறுகள் மற்றும் கால்வாய்களில் எப்படி தண்ணீர் போகும்.
தண்ணீர் வரவில்லை… தண்ணீர் வரவில்லை என்று இத்தனை நாள்களாகக் கண்ணீர் வடித்துவிட்டு, தண்ணீர் வந்த பிறகு மொத்தத் தண்ணீரையும் நேரடியாகக் கொள்ளிடத்தில் திறந்துவிட்டு கடலுக்கு அனுப்புவது என்ன நியாயம்?” என்று கண்ணீர் வடிக்கும் விவசாயிகள், இதுகுறித்து சொல்லும் காரணங்கள்… அதிர வைப்பதாக இருக்கின்றன.
”ஜூன் மாதம் 12-ம் தேதியே மேட்டூர் திறக்கப்பட்டு, 20-ம் தேதி வாக்கில் கல்லணையைக் கடந்து ஆறுகளிலும் தண்ணீர் வர ஆரம்பித்துவிடும். அதற்கேற்ப தூர்வாரும் பணிகளை செய்துமுடித்துவிடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு இப்போது வரை தூர்வாரும் பணிகளை ஆங்காங்கே செய்து கொண்டுள்ளனர். இதைத் தவிர, சிறுசிறு பாலங்கள் தொடங்கி, பெரிய பாலங்கள் வரை ஆளும் தி.மு.க-வினர் கான்ட்ராக்ட் எடுத்துக் கட்டிக் கொண்டுள்ளனர். அதற்கெல்லாம் பாதிப்பு வரக்கூடாது என்றுதான் தண்ணீரை முழுமையாகத் திறக்கமால் கொஞ்சம்போல திறந்துவிட்டுள்ளனர்” என்று குமுறலுடன் சொன்னார்கள்.
அடப்பாவிங்களா? என்று மட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது!