இது தொடர்பாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், “சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் தேவையில்லை என்று முதல்வர் பதிலளித்திருப்பது ஏற்புடையதல்ல. சாதி ஆணவக்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், தனிச் சட்டத்தின் தேவை முன்பைவிட அதிகரித்து வருகிறது.
சாதி மறுப்பு இணையர்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தம்பதியினர் அல்லது அவருடைய உறவினர்களை ஊரைவிட்டு வெளியேற்றுதல், தண்டம் விதித்தல், சமூகப் புறக்கணிப்பு செய்தல், பொருளாதாரத் தடை விதித்தல், சொத்துக்கள் மீதான உரிமையை மறுத்தல் போன்ற கொடுங்குற்றங்களும் அரங்கேற்றப்படுகின்றன.
உடுமலை சங்கர் தொடங்கி பல்வேறு சாதி ஆணவப்படுகொலைகள் காவல் நிலையங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படாததால் நடந்திருக்கின்றன. எனவேதான், சிறப்புச் சட்டம் தேவைப்படுகிறது.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய தம்பதியினர் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ, காவல் நிலையத்திலோ, அல்லது அரசு அதிகாரியிடமோ ஒரு உறுதிமொழியை தெரிவித்த பின்பு அவர்களைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிப்பதற்கு வகை செய்யப்பட வேண்டும். சாதி ஆணவக் கொலை உள்ளிட்ட குற்றங்களுக்கு தனிச்சட்டம் கட்டாயம் இயற்றப்பட வேண்டும்’ என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.