ED சோதனை!
தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகர். சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூ பகுதியிலிருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். லிப்ரா புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டைத் தொடர்ந்து ரவீந்தரின் அலுவலகம், தொழிலதிபர் பாலாஜியின் வீடு அவரது அலுவலகத்திலும் கடந்த இரண்டு தினங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக எழும் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவது தெரியவந்திருக்கிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பின்னணி என்ன?
இந்த சோதனைக்கான பின்னணி என்ன என்பது குறித்து விவரமறிந்த அமலாக்கத்துறை வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம், “கடந்த 2020-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜிக்கும், ரவீந்தருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இருவருக்குமிடையே பழக்கம் அதிகரிக்கப் பணம் கொடுத்தால் வாங்கல் அளவுக்குச் சென்றிருக்கிறது. இதனிடையே 200 கோடி ரூபாய் மதிப்பில் ரவீந்தர் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும். இதில் பணம் முதலீடு செய்தல் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று ரவீந்தர் சொல்லியிருக்கிறார். இதனை நம்பி பாலாஜி 16 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். பணம் கொடுத்து நீண்ட நாளாகியும் தொழில் எதுவும் தொடங்கப்படாததினால் பாலாஜி கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறார். ஆனால், வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்காமல் ரவீந்தர் இழுத்தடித்திருக்கிறார்.
இதனால் பாலாஜி கோபமடைந்து இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து ரவீந்தரை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்நிலையில், பாலாஜி கொடுத்த பணத்துக்குச் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்து இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் நாங்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினோம். ரவீந்தர் லிப்ரா புரோடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். பாலாஜி கொடுத்த பணத்துக்கும் சரியான ஆவணங்கள் எதுவுமில்லை. இதையொட்டியே சட்டவிரோத பணப் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் இருவருக்கும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88