மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் முக்கிய அங்கமாக இருந்துவருகிறது. மக்களவைத் தேர்தலில், ஆட்சியமைப்பதற்கு தேவையான எம்.பி-க்கள் பா.ஜ.க-வுக்கு கிடைக்காத காரணத்தால், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவுடன்தான் மத்தியில் பா.ஜ.க அரசு அமைத்திருக்கிறது.
ஆகவே, இவர்கள் இருவருமே தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினர். ஆனால், இவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்ப்பதாக இல்லை.
ஆகவே, ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதியை அமைப்பது, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு என்று ஆந்திராவுக்கான சில திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் தர வேண்டும் என்று மத்திய அரசிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். அதற்காக, இரண்டு முறை டெல்லி சென்றுவந்தார் சந்திரபாபு நாயுடு.
இந்த நிலையில், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் அல்லது சிறப்பு நிதி தர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஐக்கிய ஜனதா தளம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று தற்போது மத்திய பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.பி ராம்ப்ரீத் மண்டல் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ‘சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தேவையான காரணிகள் இருக்கக்கூடிய சில மாநிலங்களுக்கு கடந்த காலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
அதாவது, மலைப்பகுதிகளைக் கொண்ட, குறைந்த மக்கள் தொகையையும், கணிசமான பழங்குடியின மக்களையும் கொண்ட, அண்டை நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிற, பொருளாதாரத்திலும் உள்கட்டமைப்பிலும் பின்தங்கிய, வருமானத்துக்கு பெரியளவுக்கு வழியில்லாமல் இருக்கிற மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது’ என்று அவர் கூறியிருக்கிறார்.
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசின் அறிவித்துவிட்ட நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை மாநிலத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சனக்களால் துளைத்தெடுக்கின்றன. இந்த நிலையில், முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் விலக வேண்டும் என்று ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியிருக்கிறார்.
சிறப்பு அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து பீகார் சட்டமன்றத்துக்கு வெளியே நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, ‘எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்’ என்று புன்னகையுடன் பதிலளித்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அவர் நகர்ந்திருக்கிறார்.
மத்திய அரசு தங்களுடைய தயவில் இருப்பதால், பீகாருக்குத் தேவையான திட்டங்களை நிதிஷ் குமார் எளிதாகப் பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கை பீகார் மக்களிடம் எழுந்திருந்த நிலையில், நிதிஷ் குமாரின் கோரிக்கை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
மத்தியில் பா.ஜ.க அரசு ஐந்தாண்டுகளுக்கு நீடிக்காது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே கூறியிருக்கிறார். நிதிஷ் குமாரைப் பொறுத்தளவில் தனது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் அல்ல. அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார், திடீரென்று அதிலிருந்து வெளியேறி, மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்தார்.
பிறகு, பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ‘இந்தியா’ கூட்டணி அமைவதற்கு காரணமாக இருந்தார். பிறகு, மீண்டும் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து முதல்வராக நீடிக்கிறார். ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து விலகினாலும், மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நிதிஷ் குமாருக்கு நல்ல உறவு இருந்துவருகிறது. இந்த நிலையில், ‘அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்வீர்கள்’ என்று நிதிஷ் குமார் பூடகமாக அளித்த பதிலின் உள்அர்த்தம் குறித்து தேசிய அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
ஆந்திரா, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், நேற்று அறிவிக்கப்பட பட்ஜெட்டில் அவ்விரண்டு மாநிலங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதன்மூலம் சிறப்பு அந்தஸ்து இல்லை என்பதை சமாளிக்க மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கி, ஆட்சியை காப்பாற்றிக்கொள்வதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88