செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை:
அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தபோதிலும் முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களிலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அவரின் நீதிமன்ற காவல் 49-வது முறையாக நீடிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த ஞாயிறு மதியத்துக்கு மேல் சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் மருத்துவர்கள் கண்காணிப்பிலிருந்த செந்தில் பாலாஜி செவ்வாய் மாலை மீண்டும் சிறைக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணை:
கடந்த முறை ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த சமயத்தில் செந்தில் பாலாஜி தரப்பில், “உடல்நிலை சரியில்லாத நிலையில் சிறையில் இருக்கிறேன். அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் எப்போது வழக்கை விசாரித்து முடிப்பார்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என்று காரசாரமாக விவாதத்தை முன்வந்திருந்தனர். அடுத்ததாக வழக்கு விசாரணை ஜூலை 24-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகி, “அமலாக்கத்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிக்கிறார்கள். இதுவரை ஒன்பது முறை விசாரணையைத் தள்ளிவைக்கக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியைச் சிறையில் வைக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறது. ஒரு பென்டிரைவ் கிடைத்திருப்பதாகவும் அதில் செந்தில் பாலாஜியின் பெயர் இருப்பதாகவும் சொல்கிறது” என்று வாதத்தை முன்வைத்தார்.
`பதிலைத்தான் கேட்கிறோம்!’
விசாரணையின் போது பேசிய அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தினை முன்வைத்தார். அவரிடம் நீதிபதி, `இந்த வழக்கில் பணப்பரிவர்த்தனை நடந்ததற்கு ஆதாரங்கள் என்ன?’ என்று கேட்க, அதற்குச் செந்தில் பாலாஜி வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் இருப்பதாக கூறினார்கள். அதற்கு நீதிபதி, “செந்தில் பாலாஜி தரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்கிறார்களே?” என்று கேட்டார். அதற்கு அமலாக்கத்துறை தரப்பு வக்கீல், “பென் டிரைவ் கைப்பற்றப்படத்தில் தனது பங்களிப்பு இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு சொல்வதை ஏற்க முடியாது” என்றார்கள்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, “கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் செந்தில் பாலாஜியின் பெயர் எங்கு இருக்கிறது என்று கேட்கிறோம். ஒரு சாதாரணமாக கேள்வியைத்தான் முன்வைக்கிறோம். அதற்கு உங்கள் தரப்பு பதிலளிக்கவே இல்லை. சுற்றிவளைக்காமல் பதில் சொல்லுங்கள். இதற்கு தடயவியல் நிபுணர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த பதிலைத்தான் நாங்கள் கேட்கிறோம். இன்று பதில் இல்லை என்றால், நாளை பதிலுடன் வாருங்கள். விசாரணையை நாளை ஒத்திவைக்கிறேன்” என்று நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருக்கிறார்.
`ED திட்டமிட்டுத் தாமதப்படுத்துகிறது!’
வழக்கு விசாரணை ஜூலை 25-ம் தேதி பட்டியலிடப்படாமல் இருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா நேற்று வழக்கை விசாரிக்கவேண்டும் என்று முறையிட்டிருந்தார். இந்நிலையில், அடுத்தவாரம் முழுவதும் லோக் அதாலத் வழக்கு விசாரணை இருக்கும் காரணத்தினால் வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. வழக்கின் விசாரணை நீண்டு கொண்டே செல்லும் நிலையில், என்ன நடக்கிறது என்பது தொடர்பாகச் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், திமுக வழக்கறிஞர்கள் அணியில் உள்ள சிலரிடம் பேசினோம்.
“நாங்கள் முன்பிருந்து தொடர்ந்து சொல்வதைப் போல அமலாக்கத்துறை சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. இதனை நாங்கள் தொடர்ந்து சொல்லிவருகிறோம். இருந்தபோதிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டே குற்றச்சாட்டை மட்டும் முன்வைத்து வருகிறார்கள்.
முதலில் அமைச்சராக இருக்கிறார். வெளியே சென்று சாட்சியங்களைக் கலைத்துவிடக் கூடும் என்று சொல்லி ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்கள். இப்போது அவர் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். இப்போது பென்டிரைவில் அவர் பணம் வாங்கியதற்கான ஆதாரம் இருக்கிறது என்று இல்லாத ஒரு ஆவணத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இதுவரை அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவே இல்லை. அப்படி ஒரு ஆவணம் இருந்திருந்தால் அவர்கள் எப்போதோ சமர்ப்பித்திருப்பார்கள். இல்லாத ஆவணம் என்பதால் இப்போதுதான் தயார் செய்துகொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறோம். அமலாக்கத்துறை தரப்பு வேண்டுமென்றே ஜாமீன் கிடைக்கக்கூடாது என்று திட்டமிட்டு வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்துகிறது. கண்டிப்பாக விரைவில் ஜாமீன் வாங்கி செந்தில் பாலாஜி வெளியே வருவார்” என்றார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88