சென்னை மாநகராட்சி தீர்மானங்கள்
சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொழில் வரியை 35 சதவீதமும், தொழில் உரிமைக் கட்டணத்தை 100% வரையும் உயர்த்தி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மாநகராட்சியின் இந்த முடிவு ஏழை, நடுத்தர மக்களைக் மிகக் கடுமையாக பாதிக்கும் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், புதிதாக சென்னை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றிருக்கும் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் முக்கியமாக, சென்னை மாநகராட்சியின் சொந்த வருவாயைப் பெருக்கும் நோக்கில், வருவாய்த்துறை தொழில்வரிக்கான விகிதம் அரையாண்டிற்கு 35% வரை உயர்த்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, ஆறு மாத கால நிகர வருமான வகைகளில் மாத வருமானம் ரூ.21,001 முதல் ரூ.30,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி ரூ.135-லிருந்து ரூ.180 ஆகவும், ரூ.30,001 முதல் ரூ.45,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.315-லிருந்து ரூ.430 ஆகவும், ரூ.45,001 முதல் ரூ.60,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.690-லிருந்து ரூ.930 ஆக வரியை உயர்த்திட சென்னை மாநகராட்சியில் தீர்மானம் போடப்பட்டது. அதேசமயம், ரூ.60,001 முதல் ரூ.75,000 மற்றும் ரூ.75,001 அதற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் யாருக்குமே தொழில்வரி உயர்த்தப்படவில்லை.