இந்த நிலையில், செல்போன் நிறுவனங்களின் தன்னிச்சையான கட்டண உயர்வை பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருப்பதோடு, பா.ஜ.க அரசை கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறது. குறிப்பாக இதுகுறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கடுமையாகப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற போதும், தனியார் முதலாளிகளுக்கு தாராளம் காட்டும் போக்கை குறைத்துக்கொள்ளவில்லை. கடந்த ஜூலை 3-ம் தேதி முதல், தனியார் செல்போன் நிறுவனங்களான Reliance Jio, Bharti Airtel மற்றும் Vodafone Idea (Vi) ஆகிய மூன்றும் சராசரியாக 15% தங்களின் கட்டணங்களை அதிகரித்திருக்கின்றன.
குறிப்பாக, கடந்த ஜூன் 27-ம் தேதியன்று, ரிலையன்ஸ் ஜியோ அதன் கட்டணங்களை 12% -லிருந்து 27% ஆக உயர்த்தியது. அதற்கடுத்து, ஜூன் 28-ம் தேதியன்று, ஏர்டெல் அதன் கட்டணங்களை 11%-லிருந்து 21% ஆக உயர்த்தியது. அதைத்தொடர்ந்து, ஜூன் 29-ம் தேதியன்று, வோடபோன் ஐடியாவும் அதன் கட்டணங்களை 10%-லிருந்து 24% ஆக உயர்த்தியது. அதாவது, மூன்று நிறுவனங்களும் ஆலோசனை நடத்தி வெறும் 72 மணி நேரத்தில் செல்போன் கட்டண உயர்வை அறிவித்தது இதன்மூலம் நன்கு தெளிவாகிறது.
நிறுவனம் வாரியாக உயர்த்தப்பட்ட கட்டணங்களின் விவரம்:
• ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயனருக்கு ரூ.30.51 அதிகரித்துள்ளது. அதாவது, ஆண்டுக்கு ரூ.17,568 கோடி!
• ஏர்டெல் பயனர்கள் ஆண்டுக்கு ரூ.22.88 கோடி வளர்ச்சி கண்டுள்ளனர். அதாவது, ஆண்டுக்கு ரூ.10,704 கோடி!
• வோடபோன் ஐடியா பயனர்கள் ரூ.24.40 கோடி வளர்ச்சி கண்டுள்ளனர், அதாவது ஆண்டுக்கு ரூ.6,552 கோடி!
இந்த கட்டண உயர்வால் 109 கோடி செல்போன் பயனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.34,824 கோடி கூடுதல் செலவாக உருவாகியிருக்கிறது. குறிப்பாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்(TRAI) அறிக்கைப்படி, இந்த செல்போன் நிறுவனங்கள் ஒவ்வொரு செல்போன் வாடிக்கையாளரிடமிருந்தும் மாதத்திற்கு ரூ.152.55 பைசா சம்பாதிக்கின்றன. இது இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது” எனத் தரவுகளுடன் விளக்கியிருக்கிறார். மேலும், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் காட்டமான கேள்விகளையும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா எழுப்பியிருக்கிறார்.