`ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமிட்டபடி மசூதியைச் சேதப்படுத்திய இந்து அமைப்பினர்… வீடு, கடைகளுக்கு தீ வைப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் அருகில் உள்ள காஜாபூர் என்ற இடத்தில் விஷால்கட் என்ற கோட்டை இருக்கிறது. இக்கோட்டையில் சத்ரபதி சிவாஜி 1660-ம் ஆண்டு மறைந்திருந்தார். இக்கோட்டையில் அதிகப்படியான சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரி வருகின்றன. அங்கு மசூதி ஒன்றும் இருக்கிறது. சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லையெனில் போராட்டம் நடத்துவோம் என்று ராஜ்ய சபா முன்னாள் உறுப்பினர் சாம்பாஜி ராஜே எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் சில சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனாலும் முழுமையாக அகற்றப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி வலது சாரி அமைப்பினர் இரவோடு இரவாக கோட்டை முன்பு கூடினர். அவர்கள் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினரான சாம்பாஜி ராஜே தலைமையில் கோட்டையில் இருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று கோரி கோட்டையை நோக்கி பேரணி நடத்தினர்.

இதில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்த கடைகள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. சிலர் அங்கு இருந்த மசூதி மீது ஏறி நின்று ஜெய் ஸ்ரீராம் என்று கூறிய படி கோஷமிட்டுக்கொண்டே அதனை சேதப்படுத்த முயன்றனர். ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது.

வன்முறையில் ஈடுபட்டதாக 500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தவிர 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் போலீஸார் கோலாபூரில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

வன்முறையில் 12 போலீஸார், பொதுமக்கள் 6 பேர் காயம் அடைந்தனர். சிலர் மசூதி மீது ஏறி நின்று அதனை சேதப்படுத்தும் வீடியோ சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு இருக்கிறது. கோட்டையில் இருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று முதல்வர் ஷிண்டே உத்தரவாதம் கொடுத்ததை தொடர்ந்து சாம்பாஜி ராஜே தனது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார்.

மசூதியில் தாக்குதல்

சாம்பாஜி ராஜே மீது உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மசூதி தாக்கப்படும் வீடியோவை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு பகிர்ந்துள்ள எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி, ”உங்களது ஆட்சியில் மசூதி தாக்கப்பட்டுள்ளது. இது சட்டம் ஒழுங்கின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடந்த சம்பவத்திற்கு தான் பொறுப்பு கிடையாது என்றும், அரசு நிர்வாகம்தான் காரணம் என்று சாம்பாஜி ராஜே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *