தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு முழுவதும் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 10.07.2024 மற்றும் 11.07.2024 ஆகிய இரண்டு நாட்கள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
மேலும் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்சர்வேட்டரி, கல்லுக்குழி, மூஞ்சிக்கல், நாயுடுபுரம், செண்பகனூர், கீல் பூமி, ஆனந்தகிரி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இதையும் படிக்க:
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இடியுடன் மழை… வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மெய்யம்பட்டி, அப்பாஸ்புரம், ஏரக்காபட்டி, பள்ளபட்டி,கோபால்பட்டி, சாணார்பட்டி, உலுப்பகுடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை மண்ணை குளிர்வித்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது.
புதுக்கோட்டை மற்றும் திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கடந்த சில தினங்களாக, வெயில் வாட்டிய நிலையில், திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதே போல, தஞ்சை சுற்றுவட்டாரத்தில் 30 நிமிடத்திற்கும் மேலாக மழை பொழிந்தது. பூதலூர், வல்லம், திருமலை சமுத்திரம், திருக்கானூர் பட்டி, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், அய்யம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் நாளை (12.07.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
.