அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில், அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் `தமிழ்ப் புதல்வன் திட்டம்’ தொடக்கி வைப்பது, உக்கடம் மேம்பாலம் திறப்பு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை வந்திருந்தார். கோவை அரசுக் கலைக் கல்லூரியில் நடந்த தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், “திராவிட மாடல் அரசு கடந்த மூன்றாண்டுகளில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. நாட்டுக்கே தமிழ்நாடு முன்மாதிரி என்று சொல்லும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
மகளிர் இலவச பேருந்து திட்டத்தை இதுவரை 518 கோடி முறை பெண்கள் பயன்படுத்தியுள்ளனர். காலை உணவுத் திட்டத்தின் மூலம் தினசரி 20 லட்சம் மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகிறார்கள். மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. புதுமை பெண் திட்டத்தின் கீழ் 3.78 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குகிறோம். அதேபோல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு உதவும் வகையில் இன்று தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3.78 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, தந்தையாக இருந்து இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். இதற்காக ரூ.380 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக கொண்டு வரவேண்டும்.
மாணவர்கள் கல்விக்கு எதுவும் தடங்கலாக இருக்கக் கூடாது. அப்படி தடை இருந்தாலும் அதை மாணவர்கள் உடைத்து முன்னேற, நான் உடனிருப்பேன். தடைகள் என்பது உடைத்தெறிய தான். அதை பார்த்து முடங்கி உட்கார கூடாது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தடைகளை உடைத்து, துணிச்சல்மிக்க அசாத்திய பெண்ணாக நாடே பாராட்டும் வகையில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். உங்கள் மீது நான் அபார நம்பிக்கை வைத்திருக்கிறேன்.” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களுடன், பாஜக தேசிய மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். முன்னதாக வானதி சீனிவாசன், கோவை எம்.பி கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி, கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ஆகியோருக்கு தொடக்கத்தில் மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. அதன்பிறகு அவர்கள் 4 பேருக்கும் மேடையிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்தபிறகு ஸ்டாலினும், வானதி சீனிவாசனும் மரியாதை நிமித்தமாக சில நிமிடங்கள் உரையாடினார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88