`தந்தையின் நாணயத்தை வெளியிட, தனது நாணயத்தை அடமானம் வைத்துவிட்டார் ஸ்டாலின்'- ஆர்.பி.உதயகுமார் தாக்கு

“நாணயம் வெளியீட்டு விழாவின் மூலம் பா.ஜ.க-வை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார். ‘கோ பேக் மோடி’ என கூறியவர், தற்போது ‘வெல்கம் மோடி’ என வரவேற்கிறார்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்.

ஆர்.பி.உதயகுமார்

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர், “கலைஞர் நாணயம் வெளியீட்டு நிகழ்வில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், `கலைஞரை புகழ்ந்து பேசியதால், எனக்கு தூக்கம் வரவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அமைச்சர்கள் கண்ணாபின்னாவென்று பேசுவதால் தூக்கம் வரவில்லை என முதல்வர் ஏற்கெனவே கூறியுள்ளார்.

கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டில் யாருக்கும் எந்தவொரு வருத்தமுமில்லை, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சிக்கு வரக் கூடாது என மேடைக்கு மேடை முதல்வர் ஸ்டாலின் பேசினார். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு நிகழ்ச்சி, அதனால் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கே ஆகியோரை அழைக்க முடியவில்லை என முதல்வர் கூறியுள்ளார், ஆனால், மாநில அரசுதான் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு நிகழ்ச்சி என மாநில அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. விழா குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமியை பார்த்து மூளை இருக்கிறதா என முதல்வர் கிண்டலாக கேட்டுள்ளார். மத்திய அரசு விழாவா, மாநில அரசு விழாவா என்பதுகூட தெரியாத முட்டாள் முதல்வரைப் பெற்று இருக்கிறோம் என தமிழக மக்கள் வேதனையில் உள்ளனர்.

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா

தி.மு.க-வின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்து இருக்கிறது, ஆனால், நிகழ்ச்சியில் கலைஞரை தி.மு.க-வினரை விட ராஜ்நாத் சிங் புகழ்ந்து பேசியுள்ளார். பாசிச ஆட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என சொன்ன முதல்வர், தந்தையின் நாணயத்தை வெளியிட தனது நாணயத்தை அடமானம் வைத்து விட்டார். கலைஞருக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்பதற்காக முதல்வர் தமிழ் இனத்தை அடமானம் வைத்து விட்டார்.

ஜெயலலிதா மறைவிற்கு அ.தி.மு.க நினைவு கூட்டத்தை நடத்தி உள்ளதா என முதல்வர் கேட்டுள்ளார், ஜெயலலிதாவிற்கு நினைவிடம், திருக்கோயில் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகம் இருந்தால் மதுரைக்கு வரும் முதல்வர், அம்மா திருக்கோயிலுக்கு வரலாம், கலைஞர் நாணய வெளியீட்டு விழா மூலம் மத்திய அரசிடம் முதல்வர் மாநில வளர்ச்சிக்கு ஏன் நிதி கேட்கவில்லை?

`வெள்ள நிவாரண நிதி தரவில்லை… பாசிச பாஜக ஆட்சியை உள்ளே விட மாட்டோம்’ என்றும், `நிதி ஆயோக் கூட்டத்தில் பாரதப் பிரதமரிடம் நிதி வேண்டி முறையிடமாட்டேன், தன்மானம் உள்ளது’ என்றும் கூறிய முதலமைச்சர், நாணயம் வெளியீட்டு விழாவின் மூலம் பா.ஜ.க-வை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார். ‘கோ பேக் மோடி’ எனக் கூறியவர் தற்போது ‘வெல்கம் மோடி’ என வரவேற்கிறார். நாணயத்தில் இந்தி மொழி இடம்பெற்றுள்ளது குறித்து எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு முதல்வரால் பதில் சொல்ல திராணி இல்லை. தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும். தி.மு.க – பா.ஜ.க கூட்டணியை வெளிப்படையாக அறிவித்து விடலாமே? தி.மு.க, பா.ஜ.க-வுடன் கள்ள உறவு வைத்திருப்பது தெரிந்துவிட்டதால், முதல்வர் உளறி வருகிறார்.

ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க கூட்டணியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில், பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதன் மர்மம் ஏன்ன? கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை மட்டுமே வைத்து பேசவில்லை, தொடர் நிகழ்வை வைத்துதான் பேசுகிறோம். தி.மு.க – பா.ஜ.க உறவை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது தானே? தமிழக மக்களை ஏமாற்றாமால் தி.மு.க – பா.ஜ.க கூட்டணியை அறிவித்து விட வேண்டியது தானே?

தி.மு.க – பா.ஜ.க உறவின் மூலம் தி.மு.க ஆட்சியை காப்பற்றவும், உதயநிதியை துணை முதல்வராக்கவும் தி.மு.க கூட்டணி கட்சிகளை கைவிட்டுள்ளது, தி.மு.க-வை அழிக்க நினைத்த அண்ணாமலை, கலைஞர் நினைவிடத்தில் கும்பிடு போட்டு கொண்டிருக்கிறார். அண்ணாமலைக்கு இன்னும் அரசியல் அனுபவம் தேவைப்படுகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *