தமிழகத்திலும் ‘லேட்டரல் என்ட்ரி’யா? – ராமதாஸ் சொல்வதென்ன?!

மத்திய அரசுத் துறைகளில் உயர் பதவிகளுக்கு ‘லேட்டரல் என்ட்ரி’ முறையில் வெளிநபர்களை நியமனம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அது தொடர்பான அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசுப் பதவிகளுக்கு இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் பணி நியமனங்கள் நடைபெற்றிருப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

யுபிஎஸ்சி

‘லேட்டரல் என்ட்ரி முறையால் இட ஒதுக்கீட்டு முறை பாதிக்கப்படுகிறது’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்களும் விமர்சித்தனர். அதைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் பல பணி நியமனங்கள் நடைபெறுவதாக ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 பணிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை வெளியிட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

ராமதாஸ்

தமிழக முதல்வர் ஸ்டாலினும் இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, எந்த இட ஒதுக்கீட்டையும் பின்பற்றாமல் பல நியமனங்கள் நடைபெற்றிருக்கின்றன. விதிகளைப் பின்பற்றி செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தினார்.

மேலும், “சமூக நீதி… சமூக நீதி என்று மூச்சுக்கு முந்நூறு தடவை முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு இழைத்திருப்பதெல்லாம் சமூக அநீதிதான். தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றி செய்யப்பட்ட பணி நியமனங்கள் எத்தனை? இட ஒதுக்கீடு விதிகளைப் பின்பற்றாமல் செய்யப்பட்ட பணி நியமனங்கள் எத்தனை என்ற விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்

இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாமல் செய்யப்பட்ட அனைத்து நிலை பணி நியமனங்களையும் ரத்துசெய்ய வேண்டும். இனிமேல், அனைத்து நிலை பணி நியமனங்களும் இட ஒதுக்கீடு விதிகளைப் பின்பற்றித்தான் செய்யப்படும் என்று தமிழக அரசின் சார்பில் கொள்கைப் பிரகடனம் வெளியிட வேண்டும்” என்றும் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழக அரசின் துறைகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் பணி நியமனங்கள் நடைபெறுகின்றனவா என்பது குறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது, “மத்திய அரசைப் பொறுத்தளவில் இணைச் செயலாளர் உள்ளிட்ட உயர் பதவிகளில் 45 இடங்களை லேட்டரல் என்ட்ரி மூலமாக நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி அறிவிக்கை வெளியிட்டது.

ஆனால், தமிழகத்தில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. அதாவது, தமிழக அரசின் உயர் பதவிகள் எதுவும் லேட்டரல் என்ட்ரி மூலமாக நிரப்பப்படவில்லை. எனவே, ஆதாரங்கள் இல்லாமல் பொத்தாம் பொதுவாக இது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது சரியல்ல” என்றனர்.

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில், அலுவலக உதவியாளர் போன்ற கீழ்மட்ட பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் நியமனங்கள் நடைபெறுகின்றன. ஆனால், உயர் பதவிகளுக்கு அப்படியான நியமனங்கள் நடைபெறவில்லை.

தலைமைச்செயலகம்

ஆனாலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பதால், அதைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது’ என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *