தொடர்ச்சியாக தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை பேசி வருகிறார். இந்த சூழலிதான் சமீபத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “நாம் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோமா.. அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா.. எத்தனை காலம் பிறரை சார்ந்திருக்கப் போகிறோம்.. காங்கிரஸ் பெரியக்கத்துக்கு என்று வரலாறு இருக்கிறது. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 99 பேர் வெற்றிபெற்று இருக்கிறார்கள். இரண்டு பேர் தாமாக முன்வந்து காங்கிரஸ் பக்கம் இணைந்துள்ளார்கள். ஆகவே நம்முடைய கணக்கு 101. இது இன்னும் ஏறப்போகிறது. என்.டி.ஏ கூட்டணியில் அமைச்சர்களாக இருப்பவர்களும், நம்முடைய காங்கிரஸ் பேரியக்கத்துக்கு வந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. எனவே தோழமை என்பது வேறு. தோழமையுடன் இருப்பதில் நமக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. ஆனால் எவ்வளவு காலம் சார்ந்து இருக்கப் போகிறோம் என்கிற கேள்வி எழுகிறது. அதற்கு விடை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்” என்றார்.
பிறகு இந்த விவகாரம் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், “பொதுக்குழு கூட்டத்தில் நான் பேசும் போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதை அடைவதற்கு இலக்கும் இருக்கிறது. அதைப்போல, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த கருத்தியல் தான் காமராஜர் ஆட்சி என்று குறிப்பிட்டேன். இன்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்கிற நமது கனவு மெய்ப்பட வேண்டுமென்றால் இன்றிலிருந்து அதற்கான உழைப்பை செலுத்தி நமது இயக்கத்தை வலிமைப் படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இங்கு உரையாற்றுபவர்கள் கருத்துகளை கூற வேண்டுமென்று கூறினேன்.
ஆனால், எனக்கு பின்னால் உரையாற்றியவர்கள் கூறிய சில கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பொதுக்குழுவின் நோக்கம் என்பது காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்துவது தான். அதே நேரத்தில், காங்கிரஸ் பங்கேற்றிருக்கிற கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற மு.க. ஸ்டாலினின் கடுமையான உழைப்பையும், வெற்றிக்கான அவரின் பங்களிப்பையும் எப்பொழுதுமே மதிக்க தவறியதில்லை. அவரின் பங்களிப்பில்லாமல் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. சட்டப் பேரவையில் எனது உரைகள் அனைத்துமே தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு உற்ற துணையாகவும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கிற வகையிலும் அமைந்துள்ளதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். எஃகு கோட்டை போல் இருக்கும் இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் காங்கிரஸ் எங்கு தடுமாறியது என்கிற கேள்விக்கு பதிலளித்து பேசும் அரசியல் நோக்கர்கள், “தமிழகத்தில் 1962-ம் ஆண்டு வரையில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. 1965-ம் ஆண்டு இந்தியை ஒரே ஆட்சி மொழியாக ஆக்குவதற்கு அப்போதைய மத்திய அரசு முயற்சித்தது. அதை கண்டித்து தி.மு.க மிகப்பெரிய போராட்டத்ததை 1965-ம் ஆண்டு முன்னெடுத்தது. இதனால் தமிழக அரசியல்களம் அந்த நேரத்தில் உஷ்ணமாக இருந்தது. அப்போதுதான் 1967-ம் ஆண்டு தேர்தலும் நடந்தது. சட்டப்பேரவை தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க 137 இடங்களைக் கைப்பற்றியது. மறுபக்கம் 232 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 51 தொகுதிகளை மட்டுமே பிடிக்க முடிந்தது.
இதுவே நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க 25 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் மட்டுமே வெல்ல முடிந்தது. பிறகு காங்கிரஸ் தலைமைக்குள் மோதல் ஏற்பட்டது. 1969-ம் ஆண்டு காமராஜர் அணி, இந்திரா அணி என இரு பிரிவுகள் ஏற்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில்தான் 1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக தமிழகத்தில் நடந்தது. அப்போது தி.மு.க, இந்திரா காங்கிரஸ் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. இதில் காங்கிரஸுக்கு 9 நாடாளுமன்ற தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. சட்டமன்றத்தில் எந்த தொகுதியிலும் காங்கிரஸ் நிற்கவில்லை. அன்று தொங்கிய வீழ்ச்சி இன்றுவரை நீடிக்கிறது. எனவே முதலில் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்க்க வேண்டும். அதற்கு தேவையானதை செய்ய வேண்டும். 2026-ம் ஆண்டு தேர்தலை தனியாக சந்திக்க வாய்ப்பில்லை. தனது கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்கே இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88