தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தம்மனை கைது செய்ய இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகையில் நடைபெற்ற கூட்டத்தில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சு பேசியதாக அஸ்வத்தமன் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரிய அஸ்வத்தம்மன் மனு மீது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 1க்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தமிழக பாஜக செயலாளராக அஸ்வத்தம்மன் கடந்த 7-ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற, தமிழக சிவ சேனாவின் முன்னாள் தலைவர் தங்க முத்து கிருஷ்ணன் மனைவி தங்கம் அம்மாளின் நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சு பேசியதாக அஸ்வத்தமன் மீது நாகூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி அஸ்வத்தம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி T.V. தமிழ்ச் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அஸ்வத்தம்மன் தொடர்ச்சியாக இது போன்ற வெறுப்புகளை பேச்சுகளை பேசிவருவதாக கூறினார். மேலும், இந்த மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென தெரிவித்தார்.
இதனையடுத்து, விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதுவரை அஸ்வத்தம்மனை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.
.