புதுக்கோட்டை மாவட்டத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரக்கூடிய நிலையில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு உள்ள திருமண மண்டபத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“விக்கிரவாண்டி தேர்தலில் நாங்களும் பணம் கொடுக்கவில்லை. எதிர்க்கட்சியினரும் பணம் கொடுக்கவில்லை. ஆனால், மக்கள் வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க-வின் அதிகமான வாக்குகள் எங்களுக்கு தான் கிடைத்துள்ளது. இதனை எப்படி தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பா.ம.க கூறுகிறது என்று தெரியவில்லை. அ.தி.மு.க வாக்குகள் தனக்கு விழும் என்று பா.ம.க நினைத்தது. ஆனால், அது கிடைக்கவில்லை. அப்புறம் எப்படி அவர்களுக்கு கிடைத்த இது பெரிய வெற்றி என்று கூறுகிறார்கள். உண்மையான வெற்றி தமிழ்நாடு முதலமைச்சரின் மூன்றரை ஆண்டு கால சாதனைக்கு எப்படி 40-க்கு 40 வெற்றி பெற்றோமோ அதேபோல ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் மிகப்பெரிய எழுச்சியையும், வெற்றியையும் எங்களுக்கும், எங்கள் தலைவருக்கும் தந்துள்ளது. நான் ஏற்கனவே கூறியதைப் போல அ.தி.மு.க-வினருக்கு அடுத்த இடம் செல்ல வேண்டும் என்றால், அது தி.மு.க தான். ஏனென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட இயக்கத்தை தமிழ்நாட்டில் வேரூன்ற செய்து மிகச் சிறப்பாக வழி நடத்தக்கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான். அதை உணர்ந்து தான் அ.தி.மு.க-வினர் விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களித்துள்ளனர். என்கவுன்ட்டர் நடக்கவில்லை என்றால் ரெளடிகளை கட்டுப்படுத்தவில்லை என்று கூறுகின்றனர். என்கவுன்ட்டர் நடந்தால் அது எப்படி நடந்தது என்று கேட்கிறீர்கள்… இரண்டு பதில்களையும் நீங்கள் தான் முன்வைக்கின்றீர்கள். குற்றவாளிகள் தப்பித்து செல்லும் பொழுது வேறு என்ன செய்வது… சுட்டு தான் பிடிக்க முடியும். ரௌடிகள் இன்று கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. எப்போதுமே எதிர்க்கட்சியினருக்கு யூகமான சந்தேகமும், புதுமையான சந்தேகமும் வரும் தான். ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொறுத்தவரை குற்றவாளிகளிடமிருந்து வீடியோ ஆதாரத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம். எப்படி அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று அதில் கூறியிருப்பார்கள். அதனால், இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். அப்படி, பிடிக்கப்பட்ட குற்றவாளிகளில் திருவேங்கடம் தப்பிச் செல்லும் பொழுது என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். அதனால்தான் அங்கு என்கவுன்ட்டர் நடந்தது. இதைத் தவிர தி.மு.க-விற்கு தொடர்பு இருக்கிறதா… இல்லையா என்று எப்படி அவர்களால் சொல்ல முடியும்?. அண்ணாமலை ஜோதிடம் பார்த்து விட்டு வந்து சொன்னால் சொல்லட்டும். யார் மீது சந்தேகம் இருக்கிறது என்று கூறினால் அவர்களையும் விசாரிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை மாயாவதி கட்சி எங்களுக்கு எதிரி கட்சி கிடையாது.
எங்களுக்கு வேண்டிய கட்சிதான், ஆம்ஸ்ட்ராங் எங்களுக்கு எதிரி கிடையாது. எங்களுக்கு தோழமை தான். அதனால், இந்த கொலை வழக்கை நாங்கள் மாறுபட்ட கோணத்தில் பார்க்க வேண்டியதில்லை. எங்களுக்கு அடையாளம் தெரிந்த உண்மை குற்றவாளிகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இதில், வேறு ஏதும் சதி செயல் இருக்கிறதா என்பது புலனாய்வில் தெரியவரும். எங்களைப் பொறுத்தவரை உண்மை குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அனைத்து துறைகளிலும் சாதனை படைத்த அரசியல் தலைவர். அப்படிப்பட்ட அரசியல் தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைக்க மாட்டார். அப்படிப்பட்ட அவரை யார் இழிவுபடுத்தி பேசினால், தங்களை அவர்களே இழிவுபடுத்தி கொள்வதாக அர்த்தம். காவிரி விவகாரத்தில் நமது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். தமிழ்நாட்டிற்குரிய உரிய நீரை பெறுவதற்கு காவிரி தீர்ப்பாயம் மூலம் நடவடிக்கை எடுப்போம். தற்போது கர்நாடகாவில் மழை நன்றாக பெய்துள்ளதால் இனி அவர்களுக்கு தண்ணீர் தருவதில் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. அதை உரிய முறையில் தீர்ப்பாயத்தில் தெரிவித்து உரிய நீரை பெறுவோம். ஒன்றிய அரசு தான் காவிரி தீர்ப்பாயத்தை வைத்துள்ளது. அவர்களிடம் தான் எல்லாமே உள்ளது. அதனால், நாங்கள் அவர்களிடம் தானே சென்று தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை கேட்க வேண்டி உள்ளது. இரண்டு மாநிலத்திற்கு இடையே பிரச்னை வரும் பொழுது அதில் ஒன்றிய அரசுதான் தலையிட்டு அதில் ஒரு முடிவை காண முடியும். ஒன்றிய அரசுக்கு தான் உரிமை உள்ளதே தவிர நாங்கள் நேராக பேசுவதில் ஒன்றுமில்லை. இது, பங்காளி பிரச்னையோ…சொத்து பிரச்னையோ அல்ல நாங்கள் நேராக பேசுவதற்கு, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்று தர வேண்டிய பொறுப்பு கடமை ஒன்றிய அரசுக்கு தான் உள்ளது. அண்ணாமலை கூறுவது போல் ஒரு மாநிலத்தில் நடைபெறும் ஆட்சியை முன்பு கலைத்தது போல் எல்லாம் கலைக்க முடியாது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வுக்கு அதற்கு மெஜாரிட்டி இருக்க வேண்டும். ஒருவேளை நாடாளுமன்றத்தில் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு ஒரு மாநிலத்தின் ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க முடிவு எடுத்தாலும் சுலபமாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்று அது செல்லாது என்று எங்களால் தீர்ப்பை பெற்றுவிட முடியும். அதனால், தமிழ்நாடு அரசை கலைப்பதற்கு அவர்களால் ஒருபோதும் முடியாது. இங்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். மக்களுக்கு தேவையான திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால், இந்த அரசை அசைக்க எந்த சக்தியாலும் முடியாது” என்று தெரிவித்தார்.